காயத்தால் தவிக்கும் ஜடேஜாவுக்கு முன்னே குத்தாட்டம் போட்டு கடுப்பேற்றிய ஷிகர் தவான் – வைரல் வீடியோ உள்ளே

Ravindra Jadeja Shikhar Dhawan
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்லும் பயணத்தில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்தில் மினி உலகக் கோப்பையை போல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது.

மொஹாலியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுபடுத்த முடியாமல் தோல்வியை சந்தித்த இந்தியா நாக்பூரில் 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையில் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது சூப்பர் 4 சுற்றில் தேவையற்ற மாற்றங்களை செய்ய வைத்து இந்தியாவுக்கு அடுத்தடுத்த தோல்விகளை பரிசளித்தது.

- Advertisement -

குணமடையும் ஜடேஜா:
அதைவிட புத்துணர்ச்சி அடைவதற்காக அலைச்சறுக்கு செய்யும் போது தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு வெளியேறிய ரவீந்திர ஜடேஜா அதன் பின் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்தும் வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. ஏனெனில் 2019க்குப்பின் பேட்டிங்கில் மிகப்பெரிய எழுச்சி கண்டு 3 வகையான இந்திய அணியிலும் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி முக்கிய வீரராக உருவெடுத்த அவர் உலக அளவில் நம்பர் ஒன் ஃபீல்டராகவும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறார்.

அப்படிப்பட்ட அவர் ஆசிய கோப்பையில் விலகியதே தோல்வியை கொடுத்த நிலையில் உலகக்கோப்பையில் விலகியதும் பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் இந்தியாவுக்கு விளையாடுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இடம் பிடித்துள்ள அக்சர் பட்டேல் ஆஸ்திரேலிய தொடரில் இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினாலும் துல்லியமாக பந்து வீசி வருவது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்து வருகிறது.

- Advertisement -

கடுப்பேற்றிய தவான்:
இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் ரவீந்திர ஜடேஜாவை சந்தித்த மற்றொரு சீனியர் நட்சத்திர இந்திய வீரர் ஷிகர் தவான் அவரை சிரிக்கும் வைக்கும் வகையில் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொதுவாகவே அவுட்டே ஆனாலும் மீசையை முறுக்கும் கெத்தான கேரக்டரையும் இதர வீரர்களுடன் கலகலப்பாக பழகும் ஜாலியான குணத்தையும் கொண்ட ஷிகர் தவான் அவ்வப்போது பாலிவுட் பாடல்களுக்கு கலகலப்பான அசைவுகளை கொடுத்து வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் காயமடைந்து அமர்ந்திருக்கும் தம்மிடம் கடுப்பேற்றும் வகையில் குத்தாட்டம் போடும் ஷிகர் தவானை பார்த்து “இவருக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வையுங்கள் இல்லையேல் பைத்தியம் பிடித்து அலைய ஆரம்பித்து விடுவார்” என்று ஜடேஜா வெறுப்பாக கூறுவது போல அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. பார்த்தாலே வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவுக்கு இந்திய வீரர்கள் அர்ஷிதீப் சிங் மற்றும் கலீல் அஹமத் ஆகியோர் சிரிப்பை அடக்க முடியாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளனர்.

முன்னதாக ஐபிஎல் தொடருக்கு பின் தனது தந்தையிட்ம அடி உதை வாங்கிய சிகர் தவான் வீடியோவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் இணையத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்து இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில் ஒரு காலத்தில் முதன்மை தொடக்க வீரராக இருந்த ஷிகர் தவான் 35 வயதை கடந்து விட்டார் என்பதற்காக இந்திய டி20 அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார்.

Dhawan-1

அதனால் டி20 உலகக் கோப்பை மற்றும் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத அவர் திறமை இருந்தும் ஜிம்பாப்வே போன்ற தொடரில் இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கிறார். இருப்பினும் அவரது இடத்தில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கி சுமாராக செயல்படும் ராகுலுக்கு பதில் மீண்டும் ஷிகர் தவானை கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement