தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக கடைசியாக பங்கேற்கும் இந்த தொடரின் 2வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 237/3 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 43 (37) கேஎல் ராகுல் 57 (28) என தொடக்க தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
அதை அடுத்ததாக களமிறங்கி பயன்படுத்திய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (22) ரன்களும் அவருடன் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி தனது பங்கிற்கு 49* (28) ரன்களும் எடுத்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 17* (7) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுக்க தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 238 என்ற பெரிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மார்க்ரம் 33 (19) ரன்களில் அவுட்டானார்.
போராடிய தென்ஆப்பிரிக்கா:
அதனால் 47/3 என தடுமாறிய தங்களது அணிக்கு அடுத்ததாக களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்த டேவிட் மில்லர் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து எதிர்ப்புறம் இருந்த டீ காக் உடன் 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினார். கடைசி வரை அவுட்டாகாத இந்த ஜோடியில் 8 பவுண்டரி 7 சிக்சரை பறக்க விட்ட டேவிட் மில்லர் சதமடித்து 106* (47) ரன்களும் 3 பவுண்டரி 4 சிக்சருடன் குயின்டன் டி காக் 69 (48) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 221/3 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
அதனால் வென்ற இந்தியா சொந்த மண்ணில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை ஒரு டி20 தொடரில் தோற்கடித்து அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2015, 2019 மற்றும் கடந்த ஜூன் மாதம் முறையே தோனி, கோலி, பண்ட் ஆகியோரது தலைமையில் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொண்டு தோல்வியடைந்த இந்தியா முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வென்றுள்ளது. அதன் வாயிலாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக சாதனை படைத்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்
ரத்தம் சொட்ட சொட்ட:
மேலும் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற தமது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இந்தியாவை முன்னேற்றிய ரோகித் சர்மா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவிற்கு உள்ளானார். அதனால் உலகக் கோப்பைக்கு முன்பாக மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய அவர் டேவிட் மில்லர் விறுவிறுப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 11வது ஓவரில் ஏதோ ஒரு வகையில் எதிர்பாராதவிதமாக மூக்கு பகுதியில் காயத்தை சந்தித்தார்.
அதனால் வலியை உணர்ந்த அவர் பந்தில் இருக்கும் ஈரத்தை துடைப்பதற்காக பயன்படுத்தப்படும் துண்டை தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து வாங்கி தனது மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்தார். அப்போது உடனடியாக வந்து சோதிக்குமாறு இந்திய அணியின் மருத்துவ குழுவை தினேஷ் கார்த்திக் அழைத்தார். இருப்பினும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போட்டியை தாமதப்படுத்தாமல் மருத்துவரை வெளியே இருக்கச் சொன்ன ரோகித் சர்மா மூக்கை துடைத்துக் கொண்டே ஹர்ஷல் படேலிடம் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை சொல்லிவிட்டு அதற்கான பீல்டிங்கையும் செட்டிங் செய்து விட்டு தான் வெளியே சென்றார்.
அவருக்கு பதில் சர்பராஸ் அஹமத் பீல்டிங் செய்ய வந்த போதிலும் காயல் சிறிய அளவில் இருந்ததால் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்ட ரோகித் சர்மா அடுத்த சில ஓவர்களில் மீண்டும் வந்து இந்தியாவை சிறப்பாக வழிநடத்தினார். இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஒரு கேப்டன் இருப்பதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று அவருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.



