உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக களமிறங்கி ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல லீக் சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது.
அடிலெய்ட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் கடுமையாக போராடி 168/8 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 27, துணை கேப்டன் கேஎல் ராகுல் 5, சூரியகுமார் யாதவ் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கை விட்ட இந்திய அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 50 (40) ரன்களையும் கடைசி நேரத்தில் மிரட்டிய ஹர்திக் பாண்டியா 63 (32) ரன்களையும் குவித்து காப்பாற்றினார்கள்.
அழுத ரோஹித்:
அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலிருந்தே சுமாராகப் பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 86* (47) ரன்களும் கேப்டன் ஜோஸ் பட்லர் 80* (49) ரன்களும் குவித்து 16 ஓவரிலேயே 170/0 ரன்கள் எடுக்க வைத்து பைனலுக்கு அழைத்துச் சென்றனர். மறுபுறம் பேட்டிங் துறையில் ஓப்பனிங்கில் 30 ரன்கள் கூட எடுக்க தவறிய இந்தியா பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பியதால் படுதோல்வியை சந்தித்து 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் பெட்டிப் படுக்கையை கட்டிக்கொண்டு இந்த உலகக் கோப்பையிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் எம்எஸ் தோனி தலைமையில் அற்புதமாக செயல்பட்டு கோப்பையை வென்ற இந்தியா அதன்பின் 2014 டி20 உலக கோப்பை பைனல், 2015 உலகக்கோப்பை செமி பைனல், 2016 டி20 உலக கோப்பை செமி பைனல், 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019 உலக கோப்பை செமி பைனல் என அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அசதினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறியது.
அதை விட கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியதால் நாக் அவுட் சுற்றில் சொதப்பாமல் பைனலுக்குச் சென்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர்.
— Guess Karo (@KuchNahiUkhada) November 10, 2022
ஆனால் காலம் மாறினாலும் கேப்டன்கள் மாறினாலும் சொதப்பலில் கொஞ்சம் கூட மாறாத இந்தியா மீண்டும் ஒருமுறை வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அதிலும் அசால்டாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற தம்மால் உலகக்கோப்பையில் பைனலுக்கு கூட இந்தியாவை செல்ல முடியாததை நினைத்து இங்கிலாந்து வென்றதும் கேப்டன் ரோகித் சர்மா கண்கலங்கி அழுதார். அதை சமாளிப்பதற்காக தலையை குனிந்து கொண்டு கண்ணீரைத் துடைத்த அவரை பார்க்கும் ரசிகர்களும் கண்கலங்குகிறார்கள்.
அதே போல் மற்றொரு வீடியோவில் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கண்கலங்கினாலும் ரோகித் சர்மாவின் தோளில் தட்டி ஆதரவு கொடுத்தார். அவர்களை பார்த்து ரசிகர்கள் சோகமடைந்தாலும் இப்போட்டியில் குறிப்பாக ரோகித் சர்மா பேட்டிங்கில் கணிசமான ரன்களை அடித்திருந்தால் கூட இந்தக் கண்ணீர் சிந்தும் நிலைமை வந்திருக்காதே என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.