வீடியோ : அதிர்ந்த ஸ்டோய்னிஸ், சுழலில் மயஜாலம் நிகழ்த்திய ஜடேஜா – அதிரடியாக காப்பாற்றிய படோனி

LSG vs CSK
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 45வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. கடந்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இப்போட்டியில் சென்னை களமிறங்க நிலையில் கேஎல் ராகுல் காயமடைந்ததால் லக்னோவின் தற்காலிக கேப்டனாக க்ருனால் பாண்டியா செயல்பட்டார். மழையால் சற்று தாமதமாக 3.45 மணிக்கு தூங்கி அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

குறிப்பாக ஏற்கனவே பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வரும் லக்னோ மைதானத்தில் மழை பெய்ததால் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதால் முதலில் பந்து வீசுவதாக தோனி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய லக்னோவுக்கு எதிர்பார்க்கப்பட்டது போலவே பிட்ச் ஆரம்பத்திலிருந்தே சுழலுக்கு சாதகமாக அமைந்து பெரிய சவாலை கொடுத்தது.

- Advertisement -

சுழலில் மயஜாலம்:
அதனால் அதிரடியை காட்ட முடியாமல் தடுமாறிய கெய்ல் மேயர்ஸ் 2 பவுண்டரியுடன் 14 (17) ரன்களில் மொயின் அலி சுழலில் அவுட்டாக மறுபடியும் தடுமாறிய மற்றொரு தொடக்க வீரர் மன்னன் வோஹ்ராவும் 10 (11) ரன்களில் தீக்சனா சுழலில் போல்ட்டானார். அடுத்து வந்த கேப்டன் க்ருனால் பாண்டியாவும் அடுத்த பந்திலேயே தீக்சனா சுழலில் ரகானேவின் சிறப்பான கேட்ச்சால் கோல்டன் டக் அவுட்டானதால் 27/3 என லக்னோ ஆரம்பத்திலேயே திணறியது. அந்த சமயத்தில் களமிறங்கிய நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 1 பவுண்டரி பறக்க விட்டு அதிரடி துவக்கினாலும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் 6 (4) ரன்களில் க்ளீன் போல்ட்டானார்.

குறிப்பாக சரியான லைனில் சரியாக டிஃபன்ஸ் செய்தும் அதை உடைக்கும் வகையில் லெக் ஸ்டம்பில் பிட்ச் செய்து ஆஃப் ஸ்டம்பில் பந்தை திருப்பிய ஜடேஜாவின் மாயாஜாலத்தில் எப்படி கிளீன் போல்ட்டானோம் என்று அதிர்ந்த வகையில் ஸ்டோய்னிஸ் ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்த சில ஓவர்களில் கரண் சர்மா 9 (16) ரன்களில் மொய்ன் அலியின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டாக 44/5 என ஆரம்பத்திலேயே சரிந்த லக்னோ 100 ரன்களை தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

ஆனால் அப்போது ஆயுஷ் படோனி அதிரடியாக விளையாடிய நிலையில் அவருடன் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் 6வது விக்கெட்டுக்கு முக்கியமான 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போதிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 20 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கௌதம் 1 (3) ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் வேறு ஏதோ பிச்சில் விளையாடுவது போல் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் படோனி விரைவாக ரன்களை சேர்த்து அரை சதமடித்து சென்னைக்கு சவாலை கொடுத்தார்.

குறிப்பாக 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 59* (33) ரன்களை 178.79 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் எடுத்த போது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. அதனால் 19.2 ஓவரில் லக்னோ 125/7 ரன்கள் எடுத்திருந்த போது வந்த மழை தொடர்ந்து பெய்ததால் அந்த அணி பேட்டிங் செய்யும் நேரமும் முடிந்தது. அதன் காரணமாக டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு சென்னைக்கு புதிய இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:DC vs GT : போட்டியின் கடைசி 20 ஆவது ஓவரை வீசும் முன்னர் நான் நினைத்தது இதைமட்டும் தான் – இஷாந்த் சர்மா பேட்டி

ஆனால் ஏற்கனவே சுழலுக்கு சாதகமாக இருந்து வரும் மைதானத்தில் தற்போது பெய்த மழை மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்பலாம். அதனால் மழை நின்று குறைவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி துவங்கினால் அதை துரத்துவதற்கு சென்னை தடுமாறும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement