வீடியோ : 200 ரன்கள் பாட்னர்ஷிப்பை உடைத்தது மட்டுமின்றி ஒரே ஓவரில் 2 விக்கெட்டை சாய்த்த – அஷ்வின்

Ashwin Wickets
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. ஆனால் 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் தொடரை கைப்பற்றினாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியுள்ளது.

அந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாளிலேயே 255/4 ரன்கள் நல்ல தொடக்கம் பெற்றது. டிராவிஸ் ஹெட் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி போராடிய இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக நின்று சிம்ம சொப்பனமாக மாறிய தொடக்க வீரர் உஸ்மான் கவஜா சதமடித்து 104* ரன்கள் குவித்தார். அவருடன் முதல் நாள் மாலை நேரத்தில் சற்று அதிரடி காட்டிய கேமரூன் கிரீன் 49* ரன்கள் குவித்தார்.

- Advertisement -

உடைத்த அஷ்வின்:
அந்த நிலையில் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே அரை சதமடித்த கேமரூம் கிரீன் தொடர்ந்து இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார். அவரை விட மறுபுறம் ஏற்கனவே சதமடித்த உஸ்மான் கவாஜா நேரம் செல்ல செல்ல மேலும் நன்கு செட்டிலாகி வேகம் – சுழல் என இந்தியாவின் அனைத்து வகையான பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 150 ரன்கள் கடந்தார். அதே வேகத்தில் உணவு இடைவெளியை கடந்து சவாலை கொடுத்த இந்த ஜோடியில் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த கேமரூன் கிரீன் தனது கேரியரில் முதல் சதமடித்து ஆஸ்திரேலியாவை மேலும் வலுப்படுத்தினார்.

அப்படியே 2 மணி நேரங்களாக மிகப்பெரிய தொல்லை கொடுத்த இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது. அதனால் தோல்வி உறுதியென்று ஆரம்பத்திலேயே இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது ஃபிளாட்டான பிட்ச்சிலும் மனம் தளராமல் போராடிய ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 130வது ஓவரின் 2வது பந்தை லெக் சைட் திசையில் அடிக்க முயற்சித்த கேமரூன் கிரீன் 18 பவுண்டரியுடன் 114 ரன்கள் குவித்து விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

அப்படி மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த ஜோடியை உடைத்த ரவிச்சந்திரன் அஸ்வினை அடுத்து வந்த அலெக்ஸ் கேரி செட்டிலாக விடாமல் அதிரடியாக பவுண்டரிகளை பறக்க விட்டு மிரட்டுவதற்கு முயற்சித்தார். ஆனால் கடைசி பந்தை தவறாக கணித்த அவர் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி சென்றார். அந்த வகையில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை இப்போட்டியில் மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ள அஷ்வின் அடுத்த சில ஓவர்களில் மிட்சேல் ஸ்டார்க்கையும் 6 ரன்களில் காலி செய்தார்.

அப்படி ஃபிளாட்டான பிட்ச்சில் தனது திறமையை உபயோகித்து குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்து இந்தியாவின் வெற்றிக்காக போராடி வருகிறார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்து வரும் உஸ்மான் கவாஜா 178 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: IND vs AUS : மைக்கல் கிளார்க், மேக்ஸ்வெல் வரிசையில் இந்திய மண்ணில் வரலாறு படைத்த – கேமரூன் கிரீன்

அவரது சிறப்பு ஆட்டத்தால் 406/7 ரன்களை கடந்துள்ள ஆஸ்திரேலியா இப்போட்டியில் தற்போதும் வலுவான நிலையில் இருக்கிறது. ஆனாலும் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருவதால் இந்தியாவும் அதில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி கடைசி 2 நாட்களில் பந்து வீச்சில் மாயாஜாலம் செய்து எப்படியாவது இந்த போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெரும் முனைப்புடன் போராடி வருகிறது.

Advertisement