பாகிஸ்தான் தோற்ற விரக்தியில் இந்திய நிரூபரிடம் அத்து மீறிய ரமீஸ் ராஜா – வைரல் வீடியோவால் கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2022 ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை யாருமே எதிர்பாராத வகையில் இளம் வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்டு இலங்கை வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் தங்களைப் போலவே லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய பாகிஸ்தானை செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 170/6 ரன்கள் சேர்த்தது. நிஷாங்கா, குசால் மெண்டிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 58/5 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணியை அதிரடியாக செயல்பட்ட ஹசரங்கா 36 (21) ரன்களும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ராஜபக்சா 71* (45) ரன்களும் குவித்து காப்பாற்றினர்.

அதை தொடர்ந்து 171 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 22/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்து 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடிய இப்திகார் அகமது 32 ரன்களும் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் இதர பேட்ஸ்மேன்கள் இலங்கையின் தரமான பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட்டானதால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 147 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ஏமாற்றிய பாக்:
அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை டாஸ் தோற்றும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 6வது ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதிலும் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடுவதால் கோப்பையை வெல்லாது என கருதிய அனைவருக்கும் ஆச்சரியப்படும் வகையிலான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இலங்கை பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மறுபுறம் இலங்கையை விட தரவரிசையிலும் தரமான வீரர்களையும் கொண்டுள்ள பாகிஸ்தான் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர் களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

கடுப்பான ராஜா:
முன்னதாக இந்த போட்டியை பார்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா நேரடியாக துபாய் மைதானத்திற்கு வந்திருந்தார். ஆனால் தங்களது அணி சொதப்பலாக செயல்பட்டு வெற்றியை கோட்டை விட்ட விரக்தியில் மைதானத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த அவரிடம் ஒரு இந்திய பத்திரிகை நிருபர் தோல்விக்கான காரணத்தை பற்றிய கேள்வி எழுப்பினார். அதற்கு பாகிஸ்தான் வாரிய தலைவர் என்ற முறையில் மரியாதையுடன் பதிலளிக்காத அவர் தன்னுடைய கோபம், ஆதங்கம், விரக்தி என எதையும் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு ரசிகரை போல் “நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர் என தெரிகிறது, பாகிஸ்தான் தோற்றதால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அதோடு நிற்காத அவர் இந்தியாவைச் சேர்ந்த அந்த நிருபரின் மொபைல் போனையும் பறித்தார். அதனால் அந்த இடத்தில் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்ட நிலையில் சில நிமிடங்கள் கழித்து மொபைல் போனை கொடுத்து விட்டு ரமீஷ் ராஜா கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினார். ஆனால் என்னுடைய மொபைல் போனை பறித்தது சரியான அணுகுமுறை அல்ல என்று அந்த நிருபர் ரமீஸ் ராஜா மற்றும் பாகிஸ்தான் வாரியத்தை சாடியுள்ளார்.

மேலும் இதை பார்த்த இதர நிருபர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வாரிய தலைவர் என்பதை மறந்து இவ்வாறு நடந்து கொண்ட ரமீஷ் ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். அத்துடன் விளையாடும் 11 பேர் அணியில் செய்த தேவையற்ற மாற்றங்களால் தான் ஆசிய கோப்பையை வெல்லாமல் இந்தியா வெறும் கையுடன் நாட்டுக்கு திரும்பியதாக நேற்று ரமீஷ் ராஜா தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த போட்டியில் எந்த மாற்றமும் செய்யாமலேயே பாகிஸ்தான் தோல்வியடைந்தது ஏன் என்று அவரிடம் தற்போது கேள்வி எழுப்பும் இந்திய ரசிகர்கள் எப்போதும் எங்களது அணியை பற்றி குறை சொல்லாமல் உங்களது அணியை மட்டும் பார்க்குமாறு பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் தோல்வியை கட்டுப்படுத்த முடியாமல் கோபப்படும் நீங்கள் எப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் அத்தனை சவால்களையும் சந்தித்து வெற்றிகரமாக நடத்த முடியும் என்றும் ரசிகர்கள் சாடுகிறார்கள்.

Advertisement