கெயிலையும் மிஞ்சி டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முரட்டு வெ.இ வீரரின் முரட்டு அடி – வீடியோ உள்ளே

Rahkeem-Cornwall
- Advertisement -

மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ள இந்த நவீன கிரிக்கெட்டில் உலகம் முழுவதிலும் தினந்தோறும் ஏராளமான டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இருப்பினும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தான் கிரிக்கெட் மிகவும் பிரபலமாகவும் நம்பர் ஒன் விளையாட்டாகவும் இருக்கிறது. ஆனால் புகழ்பெற்ற அமெரிக்காவில் இன்னுமே கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாத பெரும்பாலனவர்கள் இருப்பதால் அதை பிரபலப்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக வரலாற்றிலேயே முதல் முறையாக வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் தகுதி சுற்று போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

அதற்கு முன்பாக டி20 கிரிக்கெட்டை அந்த நாட்டில் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அட்லாண்டா ஓப்பன் என்ற பெயரில் ஒரு உள்ளூர் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஒரு போட்டியில் “அட்லான்டா பயர்” அணிக்காக “ஸ்கோயர் ட்ரைவ்” அணிக்கு எதிராக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரகீம் கார்ன்வால் களமிறங்கியது அதிரடி சரவெடியான பேட்டிங்கை துவக்கினார். அதற்கேற்றாற்போல் எதிரணியின் பந்து வீச்சும் சுமாராக இருந்ததை பயன்படுத்திய அவர் அவர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் தனது முரட்டுத்தனமான உருவத்தைப் போலவே முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

- Advertisement -

முரட்டு பேட்டிங்:
நேரம் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி விஸ்வரூபம் எடுத்த அவர் ஸ்டம்ப்களுக்கு முன்பாக மலை போல நின்று அட்டகாசமாக பேட்டிங் செய்து சதமடித்து மிரட்டினார். அதன்பின் பின்பும் திருப்தியடையாமல் அதிரடியை மேலும் அதிகப்படுத்தி எதிரணி பவுலர்களை கதறவிட்ட அவர் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி கடைசி வரை அவுட்டாகாமல் 17 பவுண்டரிகளையும் 22 மெகா சிக்ஸர்களையும் பறக்க விட்டு இரட்டை சதமடித்து வெறும் 77 பந்துகளில் 205* ரன்கள் விளாசினார்.

அவரது முரட்டுத்தனமான பேட்டிங்கால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 326/5 ரன்களை எடுத்து அட்லான்டா பயர் அணி மிரட்டியது. அதைத் தொடர்ந்து 327 ரன்களை துரத்திய ஸ்கொயர் அணி எவ்வளவோ போராடியும் 20 ஓவர்களில் 154/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 172 ரன்கள் வித்தியாசத்தில் அட்லாண்டா அணி பிரம்மாண்ட வெற்றி பெற்று அசத்தியது. அப்படி பிம்ரமாண்ட வெற்றி பெறும் அளவுக்கு பேட்டிங்கில் வெறித்தனமாக செயல்பட்டு முக்கிய பங்காற்றிய வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரஹீம் கார்ன்வால் உலகையே திரும்பி பார்க்க வைத்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

- Advertisement -

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெயில் க்டந்த 2013 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக புனே அணிக்கு எதிராக 175* ரன்கள் விளாசியதே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். ஆனால் அவரையே மிஞ்சும் வகையில் டி20 கிரிக்கெட்டில் நினைத்து பார்க்க முடியாத இரட்டை சதத்தை தனது முரட்டுத்தன பேட்டிங்கால் எட்டிய அவர் உண்மையாகவே பாராட்டுக்குரியவர். இருப்பினும் இந்த அட்லாண்டா தொடர் டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ள ஒரு உள்ளூர் தொடர் என்பதால் அவருடைய இரட்டை சதம் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறாது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் என்ற வித்தியாசமான உலக சாதனையை ஏற்கனவே படைத்துள்ளார். மேலும் அதிக உடல் எடையாக இருந்தாலும் அதை தனது செயல்பாடுகளில் எதிரொலிக்காத வகையில் சொல்லப்போனால் அந்த அதிகப்படியான எடையை பலமாக பயன்படுத்தி இது போன்ற சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் தனித்துவம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் களமிறங்கிய அவர் 242 ரன்களை 142.35 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார். அந்த வகையில் அதிக எடையுடன் இருந்தாலும் அதற்காக அனைவரும் தம்மை கிண்டல் அடிப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக விளையாடும் ரகீம் கார்ன்வால் வரும் காலங்களில் பெரிய அளவில் சாதிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement