கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதீங்க, நேரலையில் ஷாட் டைட் வாயை மூடிய பாக் அணி நிர்வாகம் – என்ன நடந்தது

Shaun Tait Pak
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2009இல் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அதன் பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு இம்முறை பாபர் அசாம் தலைமையில் களமிறங்கி முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறது. இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கையிடம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் 68/5 என கோப்பையை கோட்டை விட்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்த அந்த அணி உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்று வருகிறது.

17 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் அந்த அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் 5 போட்டிகளின் முடிவில் 3 – 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற 6வது போட்டியில் பாபர் அசாம் எடுத்த 87* (59) ரன்கள் தவிர எஞ்சிய பேட்ஸ்மென்கள் சொதப்பியதால் பாகிஸ்தான் 170 இலக்காக நிர்ணயித்தது. அதை பிலிப் சால்ட் விளாசிய 88* (41) ரன்கள் உதவியுடன் 14.3 ஓவரில் அசால்டாக சேசிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 – 3* (7) என தொடரை சமன் செய்துள்ளது.

- Advertisement -

சீக்ரட்ட சொல்லாதீங்க:
இந்த தொடரில் ஆரம்பம் முதலே பேட்டிங் – பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் நிலையான செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறி வரும் பாகிஸ்தான் அணியினர் சொந்த மண்ணிலேயே தடுமாறுவதால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் எவ்வாறு அசத்த போகிறார்கள் என்ற விமர்சனங்களை சந்தித்துள்ளனர். குறிப்பாக பந்து வீச்சில் இந்தியாவைப் போலவே கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் பிரச்சனை அந்த அணிக்கும் ஏற்பட்டுள்ளது.

அந்த நிலையில் 6வது போட்டியில் 170 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்த பின் செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷான் டைட்டை பாகிஸ்தான் அணி நிர்வாகம் வலுக்கட்டாயமாக அனுப்பியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி நிர்வாக செய்தி தொடர்பாளர் பேட்டியை துவங்குமாறு செய்தியாளர்களிடம் கோரிக்கை வைத்தார். அப்போது துவங்கிய செய்தியாளர்கள் சந்திப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பேசிய ஷான் டைட் “நாங்கள் (பாகிஸ்தான்) மோசமாக தோற்கும் போதெல்லாம் அவர்கள் (அணி நிர்வாகம்) என்னை இங்கே அனுப்பி வைத்து விடுகிறார்கள்” என்று பின்னணி உண்மையை சிரித்துக்கொண்டே போட்டுடைத்தார்.

- Advertisement -

அப்போது மேற்கொண்டு உண்மைகளை உளறி அணி நிர்வாகத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளையும் அதே போல் சொல்லிவிடுவாரோ என்று பயந்த பாகிஸ்தான் அணி நிர்வாக செய்தி தொடர்பாளர் உடனடியாக அவரது அருகே ஓடி வந்து அவர் பேசிக்கொண்டிருந்த மைக்கின் இணைப்பை துண்டித்தார். அதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் “என்ன இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். உள்ளுக்குள்ளே நடப்பதை வெளியே சொல்லாமல் வெளி உலகிற்கு தகுந்தார்போல் பேசுங்கள்” என்ற என்ற வகையில் ஒலி பெருக்கியை அணைத்துவிட்டு பாகிஸ்தான் அணி செய்தி தொடர்பாளர் ஷான் டைட்’டுக்கு எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வை கொடுத்தார்.

அத்துடன் சொல்லிக் கொடுத்தது போல் பேசுங்கள் என்ற வகையில் தாம் அணைத்த மைக்கை தாமே ஆன் செய்து விட்டு செய்தி தொடர்பாளர் சென்றார். அதனால் உண்மைகளை மேற்கொண்டு சொல்ல முடியாமல் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தகுந்த பதில்களை ஷான் டைட் கொடுத்தார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் நிறைய ரசிகர்கள் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை வழக்கம் போல கலாய்த்து வருகிறார்கள்.

அந்தக்காலம் முதல் இந்தக் காலம் வரை இது போன்ற குளறுபடிகள் செய்வதை பாகிஸ்தான் வழக்கமாக வைத்திருப்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதை அடுத்து சமைல் இருக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி அக்டோபர் 2ஆம் தேதியன்று கராச்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement