
ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் ஆகியோரது சொதப்பலான ஆட்டத்திற்கு பின் ஷான் மசூட் 52* ரன்களும் இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் 159/8 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷிதீப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா போராடி கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் அவுட்டானார். அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக்கும் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றதால் ஏற்பட்ட பரபரப்பில் ஆக்கபூர்வமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அதே ஒய்ட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை தூக்கி அடித்து 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
உடைந்த டிவி:
அதனால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா இந்த உலக கோப்பையை வெற்றியுடன் துவக்கி மிரட்டியுள்ளது. இந்த அசாத்தியமான வெற்றிக்கு தனி ஒருவனை போல நங்கூரமாகவும் அதிரடியாகவும் கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து காப்பாற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் கையிலிருந்த வெற்றியை டெத் ஓவர்களில் மோசமாக பந்து வீசி கோட்டை விட்ட பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது பாண்டியா, கார்த்திக் ஆகிய இருவரை அவுட் செய்தும் தேவையற்ற ஒய்ட் பந்துகளை வீசிய முகமத் நவாஸ் வெற்றியை நழுவ விட்டார் என்றே கூறலாம்.
இருப்பினும் அந்த ஓவரில் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட நோ-பால் தான் தங்களது தோல்விக்கு காரணம் என்று நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சிக்கின்றனர். அதையும் தாண்டி ஒரு தீவிரமான பாகிஸ்தான் வெறியர் இந்த தோல்வியை தாங்க முடியாமல் 40 நண்பர்கள் மற்றும் உறவினருடன் சேர்ந்து வீட்டில் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தோல்வியால் டிவியை அடித்து நொறுக்கி விட்டதாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது இதர ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் தம்முடைய மனைவி மற்றும் குழந்தைகள் தன்னை சென்று விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ள அவர் இனிமேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்றும் டாட்டா காட்டியுள்ளார்.
பொதுவாகவே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியின் முடிவில் தோற்கும் நாட்டில் இது போன்ற தீவிர ரசிகர்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தங்களது சொந்தப் பணத்தில் போட்டு வாங்கிய உபகரணங்களை உடைப்பது வழக்கமாகும். அதற்கு வீடியோ ஆதாரமாக அஷ்வின் தூக்கி அடித்த கடைசி பந்தில் “கேட்ச் வாவா என்று வடிவேலு பாணியில்” சைகை கொடுத்து தனது வீட்டில் அமர்ந்து ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர் இறுதியில் இந்தியா வென்றதால் டேபிளில் இருந்த தட்டை எடுத்து டிவி மீது போட்டு எட்டி உதைத்து அடித்து நொறுக்கினார்.
அதே போல் மற்றொரு வீடியோவில் கடைசி ஓவரில் பாண்டியா மற்றும் கார்த்திக் அவுட்டான போது டான்ஸ் ஆடி கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்கள் இறுதியில் தோல்வியடைந்ததும் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார்கள். இது போக ஏராளமான பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியால் நோ பால் காரணமாக நீங்கள் தப்பித்து விட்டதாக சொல்லி நழுவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.