வீடியோ : மாயமில்லை மந்திரமில்லை, பந்தும் பேட்ஸ்மேன் காலும் படாமலேயே – பெய்ல்ஸ் விழுந்தது எப்படி? அனைவரும் வியப்பு

nic madinson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் பிரபல டி20 தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் 12வது சீசன் கடந்த டிசம்பர் 13ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 8 அணிகள் 61 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் டிசம்பர் 15ஆம் தேதியன்று நடைபெற்ற 3வது போட்டியில் மெல்போன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 166/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மற்றும் கேப்டன் நிக் மேடின்சன் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 87 (49) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 35 (28) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 167 ரன்களை துரத்திய பிரிஸ்பேன் அணி முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 144/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜிம்மி பெர்சன் 43 (30) ரன்கள் எடுத்தார். அதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மெல்போர்ன் இத்தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அதை விட இப்போட்டியில் 87 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருதை வென்ற நிக் மேடின்சன் ஒரு முக்கிய தருணத்தில் அவுட்டான விதம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

மாயமில்லை மந்திரமில்லை:
ஏனெனில் 9வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட அவர் ஃபுல் சாட் அடித்து சிங்கள் எடுக்க முயற்சித்தார். ஆனால் அந்த சமயத்தில் பெய்ல்ஸ் கீழே விழுந்ததுடன் ஸ்டம்ப்புகளில் லைட் எரிந்ததால் அவரது கால் பட்டு விட்டதாக நினைத்து ஹிட் விக்கெட்டாகி விட்டார் என்ற நினைப்பில் எதிரணியினர் அதை கொண்டாடினார்கள். சொல்லப்போனால் தமது கால் கண்டிப்பாக பட்டிருக்கும் என்ற உறுதியான எண்ணத்துடன் அவரும் ஏமாற்றத்துடன் பெவிலியனை நோக்கி நடந்தார்.

ஆனால் அவரது கால் எதுவும் படவில்லை என்பதை எதிர்புறமிருந்து கவனித்த ஆரோன் பின்ச் நடுவரிடம் அதை சோதிக்குமாறு கோரிக்கை வைத்தார். அதை சோதித்துப் பார்க்கப்பட்டதில் தான் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. ஏனெனில் அவர் ஃபுல் ஷாட்டை சுழன்றடிக்கும் போது அவரது கால் கொஞ்சம் கூட ஸ்டம்ப்புகளில் படவில்லை. அதை விட துல்லியமாக பந்து ஸ்டம்ப்புகளை கடக்கும் போது பெய்ல்ஸ் கீழே விழுந்தது. அதைப் பார்த்து வியந்து போன வர்ணனையாளர்கள் “என்ன நடக்கிறது எப்படி பெயில்ஸ் கீழே விழுந்தது” என்று நேரலையில் வியப்பை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

அதை சில நிமிடங்கள் தீவிரமாக ஆராய்ந்த நடுவரும் கால் படாமலேயே பெய்ல்ஸ் விழுந்ததை கண்டறிந்தார். ஆனால் ஒன்று பந்து பட்டு பெய்ல்ஸ் கீழே விழ வேண்டும் அல்லது பேட்ஸ்மேன்களால் பெய்ல்ஸ் கீழே விழுந்தால் மட்டுமே அவுட் கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை விதிமுறையாகும். அந்த தருணத்தில் அது இரண்டுமே நடைபெறாத காரணத்தால் வீடியோ ஆதாரத்தை பார்த்த நடுவர் நிக் மேடின்சன் அவுட்டில்லை என்று பெரிய திரையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 49 ரன்களில் இருந்த அவர் இறுதியில் 87 ரன்கள் விளாசி தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆனால் அந்த தருணத்தில் பந்தும் படாமல் பேட்ஸ்மேனின் காலும் படாமல் மாயமின்றி மந்திரமின்றி பெய்ல்ஸ் எப்படி கீழே விழுந்தது என்பதே அனைவரது ஆச்சரியமாகவும் கேள்வியாகவும் இருந்தது. இருப்பினும் பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான காற்றடிக்கும் என்ற நிலையில் இப்போட்டி நடைபெற்ற கேர்ன்ஸ் ஓவல் கிரிக்கெட் மைதானம் திறந்த வெளியாக இருந்ததால் ஒருவேளை அதிகப்படியான காற்றின் வேகத்தால் பெய்ல்ஸ் கீழே விழுந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: 25 ஆண்டுகால பழைய சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்ட ஆலன் டொனால்டு – அதற்கு டிராவிட் கொடுத்த பக்கா ரிப்ளை

முன்னதாக சட்டோகிராம் நகரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாத காரணத்தால் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் தப்பியது அனைவரது கவனத்தை ஈர்த்தது. மறுபுறம் ஆஸ்திரேலியாவில் பெய்ல்ஸ் கீழே விழுந்தும் பேட்ஸ்மேன் அவுட்டாகவில்லை என்பது கிரிக்கெட்டின் பல்வேறு வகையான அடிப்படை விதிமுறைகளை ரசிகர்களுக்கு உணர்த்தும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது.

Advertisement