வீடியோ : இரவு நேரத்தில் ருதுராஜ் உள்ளிட்ட நண்பர்களுடன் புதிய காரில் சூப்பரான ரெய்ட் போன தோனி – என்ன விலைனு பாருங்க

MS Dhoni Car
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக போற்றப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அந்தந்த அணி நிர்வாகங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது கேப்டன் எம்எஸ் தோனியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

இந்தியாவை போலவே ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் அதிரடியான பேட்டிங், கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்களின் கதையை முடிக்கும் விக்கெட் கீப்பிங், கூலான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்களால் சென்னையை வெற்றி நடை போட வைத்து வரும் அவரை தமிழக ரசிகர்கள் தல என்றழைத்து கொண்டாடுகிறார்கள். அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு காரணமாக ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்ட தோனி தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

- Advertisement -

சூப்பர் ரெய்ட்:
அதன் காரணமாகவே கடந்த வருடம் அந்த வாய்ப்பை பெறாத அவர் அடுத்த வருடம் சென்னை மண்ணில் நடைபெறும் 2023 ஐபிஎல் விளையாட காத்திருக்கிறார். மேலும் 39 வயதை தாண்டி விட்ட அவர் அடுத்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்தும் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை மிகவும் விரும்பக் கூடியவராக திகழும் தோனி தன்னுடைய வீட்டில் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கி கலெக்ஷனாக வைத்துள்ளார். மேலும் மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகும் எந்த சிறப்பான காராக இருந்தாலும் அதை உடனடியாக வாங்கி விடும் குணத்தைக் கொண்ட அவர் தற்போது பிரபல “கியா” நிறுவனத்தின் ஈவி6 மாடல் காரை வாங்கியுள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தால் இயங்கும் இந்த வகையான கார் இந்திய ரூபாயில் 59.95 – 64.95 லட்சங்கள் என்று தெரிய வருகிறது. சமீபத்தில் அந்த காரை வாங்கியுள்ள தோனி நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நம்பிக்கை நட்சத்திர இளம் வீரராக கருதப்படும் ருதுராஜ் கைக்வாட் மற்றும் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் ஆகியோரை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான ராஞ்சியில் ஜாலியான ரைட் போயுள்ளார். தற்போது இந்தியாவில் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் முக்கிய போட்டிகள் ராஞ்சி நகரில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அதில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் தனது நண்பர்களாக இருப்பதால் நேற்றைய போட்டி முடித்த பின் இரவு விருந்துக்கு அழைத்த தோனி தாம் வாங்கிய புதிய காரில் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த கார் இன்னும் பதிவு செய்யப்படாமல் தற்காலிக பதிவுடன் உள்ளதும் தெரிய வருகிறது. இதை எப்படியோ கவனித்த உள்ளூர் ரசிகர்கள் வழக்கம் போல புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் தற்போது அது வைரலாகி வருகிறது. முன்னதாக ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பாக சென்னை தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல் இதோ:

தோனி (கேப்டன்), டேவோன் கோன்வே, ருதுராஜ் கைக்வாட், அம்பத்தி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வைன் பிரிடோரிஸ், மிட்செல் சாட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா.

சென்னை விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: ட்வயன் ப்ராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்

Advertisement