வீடியோ : கண்ணீருடன் இடுப்பில் கட்டிப்பிடித்த தல தோனி – அன்று அவுட்டாக சொன்ன சிஎஸ்கே ரசிகர்களை கொண்டாட வைத்த ஜடேஜா

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மாபெரும் இறுதிப் போட்டியில் மோதின. மே 28இல் அகமதாபாத் நகரில் துவங்கிய அந்த போட்டி மழையால் மே 29ஆம் தேதி மீண்டும் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்களும் சஹா 54 (39) ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்களை சாய்த்தார்.

அதை சென்னை துரத்திய போது மழை வந்து 2 மணி நேரம் போட்டி தாமதமானதால் 15 ஓவரில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு 4 ஓவர்களை கொண்ட பவர் பிளேவை சரியாக பயன்படுத்தி 6.3 ஓவர்கள் வரை அதிரடியாக நின்று 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட டேவோன் கான்வே 47 (25) ரன்களில் ஆட்டமிழந்தது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

கண்ணீருடன் தல தோனி:
இருப்பினும் மிடில் ஆர்டரில் அஜிங்கிய ரகானே அதிரடியாக விளையாடி 27 (13) ரன்களும் ராயுடு தனது கடைசி போட்டியில் பட்டாசாக 19 (8) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் தோனியும் கோல்டன் டக் அவுட்டானதால் மீண்டும் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிவம் துபே 2 சிக்ஸருடன் 32* (21) எடுத்ததால் வெற்றியை நெருங்கிய சென்னைக்கு மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அதில் அந்த இருவருமே முதல் 4 பந்தில் சிங்கிள் மட்டுமே எடுத்ததால் சென்னையில் தோல்வி உறுதியென்று அனைவருமே நினைத்தனர். குறிப்பாக அதை பார்க்க முடியாத தோனி கண்ணை மூடிக்கொண்டு தங்களுடைய கண்ணீரை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தார்.

ஆனால் தோனிக்காக எதையும் செய்வேன் என்பது போல் 5வது பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது மோகித் சர்மா யார்க்கரை சிக்ஸராக பறக்க விட்ட ஜடேஜா கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது ஃபைன் லெக் திசையில் பவுண்டரியை பறக்க விட்டு 15* (6) ரன்களை விளாசி மாஸ் பினிஷிங் கொடுத்தார். அதனால் 5வது கோப்பையை வென்ற சென்னை ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனை சமன் செய்தது.

- Advertisement -

அதன் பின்பே கண் திறந்த தோனி வெற்றி பெற்று விட்டோமா? என்ற மகிழ்ச்சியில் எழுந்து இதர அணியினருக்கு கை கொடுத்தார். அதை விட குஜராத்தைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சென்னைக்காக அபார ஃபினிஷிங் கொடுத்து ரசிகர்கள் முன்னிலையில் வெறித்தனமாக வெற்றியை கொண்டாடிக் கொண்டே பெவிலியன் சென்றார். அப்போது தம்மை நோக்கி வந்த ஜடேஜாவை குழந்தையைப் போல் தூக்கிய இடுப்பில் வைத்த தோனி மனதார கட்டி அணைத்து கண்ணை மூடிக்கொண்டே அழுதது வெளிப்படையாகவே தெரிந்தது.

அதை பார்த்த சென்னை ரசிகர்கள் எங்களையும் எங்க தல தோனியையும் மகிழ்ச்சியடைய வைத்த உங்களுக்கு கோடி பாராட்டுக்கள் என்று ஜடேஜாவை தற்போது கொண்டாடி வருகிறார்கள். ஆனால் 3 உலகக் கோப்பைகளை இந்தியாவுக்கு வென்ற மகத்தான தோனி 42 வயதாவதால் விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதன் காரணமாக அவருடைய பேட்டிங்கையும் சிக்ஸரையும் பார்க்க விரும்பிய ரசிகர்கள் இத்தொடர் முழுவதும் முன்கூட்டியே களமிறங்கிய ஜடேஜாவை அவுட்டாகுமாறு பேனரில் எழுதி வைத்து வெளிப்படையாகவே கேட்டனர். அப்படி தமக்கு ஆதரவு கொடுக்காமல் அவுட்டாகுமாறு கேட்ட சென்னை ரசிகர்களிடம் ரவீந்திர ஜடேஜாவும் கடந்த சில வருடங்களாகவே வெளிப்படையாகவே ட்விட்டரில் கோபித்துக் கொண்டார்.

இதையும் படிங்க:CSK vs GT : குஜராத் தோல்வி அடைந்தாலும் தமிழக வீரரை மனதார பாராட்டி சச்சின் வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

ஆனால் இந்த மாபெரும் ஃபைனலில் தோனி கோல்டன் டக் அவுட்டான சமயத்தில் வந்த அவர் அபார ஃபினிஷிங் கொடுத்து சென்னைக்கு வெற்றியை பரிசாக்கி வாழ்க்கை வட்டம் என்பதை நிரூபித்துள்ளார். அதன் காரணமாக எங்களை மன்னித்து விடுங்கள் “ஜடேஜா நீங்கள் எப்போதுமே எங்களுடைய ஹீரோ தான்” என்று சமூக வலைதளங்களில் சென்னை ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement