IND vs SA : தப்பு பண்ணிட்டு அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

Mohammed Siraj Umpire Shreyas Iyer
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வாரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்த இந்திய அணி அக்டோபர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஞ்சியில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 278/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு டீ காக் 5, ஜானெமன் மாலன் என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் 3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் நங்கூரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரீசா ஹென்றிக்ஸ் 74 (76) ரன்களும் ஐடன் மார்க்ரம் 79 (89) ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.

இறுதியில் டேவிட் மில்லர் 35*, வேன் பர்ணல் 16, கேசவ் மகாராஜ் 5 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் சிறப்பாக பந்து வீசிய அசத்திய இந்தியாவின் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 279 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் 13, சுப்மன் கில் 28 என சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்கள்.

- Advertisement -

பதிலடி வெற்றி:
அதனால் 48/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு 9வது ஓவரில் ஜோடி சேர்ந்து 35வது ஓவர் வரை நங்கூரமகவும் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி 161 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இஷான் கிசான் அதிரடியாக 4 பவுண்டரி 7 சிக்சருடன் 93 (84) ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 15 பவுண்டரியுடன் சதமடித்து 113* (111) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

இறுதியில் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 30* (36) ரன்கள் எடுத்ததால் 45.5 ஓவரிலேயே 282/3 ரன்களை குவித்து வென்ற இந்தியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக எங்களை வீழ்த்த முடியாது என்ற வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

அம்பயருடன் வாக்குவாதம்:
முன்னதாக ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பந்து வீச்சில் 10 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து 38 ரன்களை 3.80 என்ற அற்புதமான எக்கனாமியில் மற்ற இந்திய பவுலர்களை காட்டிலும் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்த போது 48வது ஓவரை வீசிய அவரது ஒரு பந்தை எதிர்கொண்ட கேசவ் மகாராஜ் தவற விட்டார். அதை பிடித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் எதிர்ப்புறம் கிரீஸ் விட்டு வெளியே வந்த டேவிட் மில்லரை அவுட் செய்யுமாறு முகமது சிராஜிடம் வீசினார்.

அதை அறியாமல் டேவிட் மில்லர் வெள்ளை கோட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த நிலையில் பந்தை சரியாக பிடித்த முஹமது சிராஜ் ஸ்டம்ப்பை சரியாக அடிக்காமல் ரன் அவுட் வாய்ப்பை தவற விட்டார். ஆனால் பின்புறத்தில் அந்த பந்தை பிடிப்பதற்கு பேக்-அப் பீல்டர் இல்லாததால் முகமது சிராஜ் வீசி அந்த பந்து பவுண்டரியை நோக்கி சென்று தென் ஆப்பிரிக்காவுக்கு 4 ரன்களை பரிசளித்தது. பொதுவாக இது போன்ற சமயங்களில் நடுவர்கள் பக்கவாட்டு பகுதியில் வந்து ரன் அவுட்டை உன்னிப்பாக பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs SA : ஒருநாள் கிரிக்கெட்டில் சத்தமின்றி ஷ்ரேயாஸ் ஐயர் – படைத்த சூப்பர் சாதனைகள் இதோ

அதை களத்தில் இருந்த நடுவர் விரேந்திர சர்மா செய்ய தவறிய நிலையில் நீங்கள் ஸ்டம்ப்க்கு பின்னாடி நின்றதால் தான் குறி தவறி விட்டது என்ற வகையில் நடுவருடன் முகமது சிராஜ் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதை விட குறி தவறி பவுண்டரி கொடுத்ததால் தன் மீது இருந்த தவறை மறைக்கும் வகையில் அந்த பந்தை “டெட் பால்” என்று அறிவிக்குமாறு நடுவரை வற்புறுத்திய அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பார்க்கும் ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement