9 வருடங்கள்.. 611 நாட்கள் கழித்து அஷ்வினுக்கு வீழ்ந்த மாயாஜால விக்கெட் – கிடைத்தது எப்படி?

Stumping
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கியது. ஆசிய கோப்பையை வென்ற கையுடன் 2023 உலக கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக செயல்படுகிறார்.

அந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் மதியம் 1.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ருதுராஜ் கைக்வாட், முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் ஆகிய 5 வீரர்கள் புதிதாக இணைந்தனர். அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஷமி வீசிய முதல் ஓவரிலேயே மிட்சேல் மார்ஷ் 4 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

அஷ்வினுக்கு அதிர்ஷ்டம்:
இருப்பினும் மறுபுறம் இந்திய பவுலர்களுக்கு அதிரடியாக விளையாடி சவாலை கொடுத்த நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் 52 (53) ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். அவருடன் மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து 2வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் குவித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 41 (60) ரன்களில் ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 39 ரன்கள் எடுத்திருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 33வது ஓவரின் 4வது பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். அதை தவறாக கணித்த அவர் எட்ஜ் கொடுத்த பந்தை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலும் பிடிக்காமல் தவற விட்டார். இருப்பினும் அவரது கையில் பட்ட பந்து நேரடியாக ஸ்டம்பில் பட்டு பெய்ல்ஸை தள்ளியது. மறுபுறம் ராகுல் கேட்ச் பிடிக்கிறாரா என்பதில் கவனம் செலுத்திய லபுஸ்ஷேன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்ததை கவனிக்கவில்லை.

- Advertisement -

அதற்கிடையில் பந்து ஸ்டம்பில் பட்டு பெய்ல்ஸ் விழுந்ததால் லபுஸ்ஷேன் ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்றார். அப்படி அதிர்ஷ்டத்தின் உதவியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 611 நாட்கள் கழித்து முதல் முறையாக விக்கெட்டை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய கம்பேக் போட்டியில் மொத்தம் 10 ஓவரில் 47 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்தினார். இதன் வாயிலாக கடந்த 2014க்குப்பின் 9 வருடங்கள் கழித்து முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களை முழுமையாக வீசியும் அஸ்வின் 50க்கும் குறைவான ரன்களை மட்டுமே கொடுத்து சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய கேமரூன் கிரீன் 31 (52) ரன்களில் ரன் அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் ஜோஸ் இங்கலீஷ் அதிரடியாக 45 (45) ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 29 (21) ரன்களும் எடுத்தனர். அதனால் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகி 276 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக வேகத்தில் மிரட்டிய முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement