வீடியோ : அதுதான்யா நம்ம கேன் வில்லியம்சன், தவறை உணர்ந்து வெளிப்படையாக கேட்ட மன்னிப்பு – நடந்தது என்ன

Kane Williamson
Advertisement

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதில் நவம்பர் 1ஆம் தேதியன்று நடைபெற்ற 33வது லீக் போட்டியில் குரூப் 1 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்தை 4வது இடத்திலிருந்த இங்கிலாந்து தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்டது. புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 179/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 73* (47) ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (40) ரன்களும் எடுத்தனர்.

ENG vs NZ Devon Conway

அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 16 (11) டேவோன் கான்வே 3 (9) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 28/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 40 (40) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அடுத்த சில ஓவர்களிலேயே அவருடன் வெற்றிக்காக போராடிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 62 (36) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

வெளிப்படையான மன்னிப்பு:
அதை பயன்படுத்திய இங்கிலாந்து கடைசி நேரத்தில் துல்லியமாக பந்து வீசியதால் இறுதியில் மிச்சல் சேட்னர் 16* (10) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் நியூசிலாந்து 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. அதன் காரணமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 4 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது. அதனால் கடைசி போட்டியில் வென்றால் அரை இறுதிக்கு செல்லலாம் என்ற வாய்ப்பை இங்கிலாந்து உறுதி செய்துள்ளது.

ஆனால் அந்த அணியை விட குறைவான ரன்ரேட் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3வது இடத்தில் தவிப்பதால் கடைசி போட்டியில் வென்றாலும் அரையிறுதிக்கு செல்வது கேள்விக் குறியாகியுள்ளது. முன்னதாக பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து 45/0 என்ற நல்ல நிலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த மிச்சல் சேட்னர் வீசிய 5வது ஓவரின் ஒரு பந்தில் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக பவுண்டரி அடிக்க முயற்சித்தார். மிட் ஆஃப் திசை நோக்கி சென்ற அந்த பந்து கேட்ச்சாக மாறியதால் உள் வட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் சில அடிகள் ஓடிச் சென்று தாவி பிடித்தார்.

- Advertisement -

இருப்பினும் பந்து நழுவியதாக உணர்ந்த அவர் எப்படியும் முழங்கைகளால் பிடித்ததாக உணர்ந்து அவுட் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் ஜோஸ் பட்லரிடம் அவுட் என சொன்னதால் அவரும் பெவிலியனை நோக்கி நடையை கட்டினார். இருப்பினும் அதில் சந்தேகம் இருந்ததால் களத்தில் இருந்த நடுவர்கள் 3வது நடுவரை அழைத்தனர். அதை சோதிக்கப்பட்டதில் கேட்ச் பிடித்த பின் பந்து கேன் வில்லியம்சன் கைகளில் இருந்து வெளியே வந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் அதை முழங்கையில் எப்படியோ பிடித்து விட்டதாக கேன் வில்லியம்சன் உறுதியாக இருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

ஆனால் ரீப்ளையில் அது அவுட்டில்லை என்று தெரிய வந்ததால் நடுவர் நாட் அவுட் கொடுத்தார். அப்போது தனது தவறை உணர்ந்த கேன் வில்லியம்சன் உடனடியாக ஜோஸ் பட்லரிடம் மன்னிப்பு கேட்டார். அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜோஸ் பட்லர் 73 ரன்கள் குவித்து நியூசிலாந்துக்கு தோல்வியை கொடுத்தது வேறு கதை என்றாலும் அந்த இடத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட வில்லியம்சனை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

ஏனெனில் காற்றில் பறந்து தாவி பிடித்து அந்த ஒரு சில நொடிகளில் என்ன நடந்தது என்று அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்ட அவரது மனதை பார்த்து ரசிகர்கள் இது தான்யா கேன் வில்லியன் என்று பாராட்டுகிறார்கள். ஏனெனில் பொதுவாகவே நேர்மையுடன் நடந்து கொள்ளக் கூடிய அவர் தோல்வியடைந்தாலும் சிரித்த முகத்துடன் எதிரணிகளுடன் நட்பாக பழகுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement