இந்தியாவுக்கு எதிராக போராடி தோற்றாலும் காதலில் தோற்காத ஹாங்காங் வீரர் – மைதானத்திலேயே ப்ரபோஸ், வாழ்த்தும் ரசிகர்கள்

HK
- Advertisement -

சமீப காலங்களில் கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்கும் போட்டிகளுக்கு மத்தியில் காதல் மலர்வது இயல்பாக மாறி விட்டது. அது போன்ற ஒரு நிகழ்வு தான் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதிய 2022 ஆசிய கோப்பையின் 4-வது லீக் போட்டியில் அரங்கேறியுள்ளது. துபாயில் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஹாங்காங் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192/2 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களும் கேஎல் ராகுல் 36 ரன்களும் எடுக்க 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 59* (44) ரன்களும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26)ரன்கள் சேர்த்தனர்.

அதை தொடர்ந்து 193 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹாங்காங் அணிக்கு தொடக்க வீரர்கள் முர்த்தசா 9 ரன்களிலும் கேப்டன் நிஜாகத் கான் 10 ரன்களிலும் அவுட்டானதால் ஏற்பட்ட சரிவை மிடில் ஆர்டரில் சரி செய்ய போராடிய பாபர் ஹயாத் 41 (35) ரன்களும் கிஞ்சித் ஷா 30 (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜீசன் அலி அதிரடியாக 26* (17) ரன்களும் மெக்கன்னி 16* (8) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 20 ஓவர்களில் 152/2 ரன்களை மட்டுமே எடுத்த ஹாங்காங் 40 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

மைதானத்தில் காதல்:
இந்த வெற்றியால் ஏற்கனவே பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா குரூப் ஏ பிரிவில் பங்கேற்ற 2 லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. மறுபுறம் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த ஹாங்காங் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அப்படி போட்டியில் முடிந்தளவு போராடி தோல்வியடைந்த ஹாங்காங் அணியைச் சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிஞ்சிட் ஷா தனது காதலில் தோல்வி அடையக்கூடாது என்ற முயற்சியில் இப்போட்டியை நேரில் பார்ப்பதற்கு துபாய் மைதானத்திற்கு வந்திருந்த தனது காதலிக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் நேராக சென்று காதலை தெரிவித்தார். இந்த மறக்க முடியாத தருணத்தை மறக்கக்கூடாது என்பதற்காக பின்னாடியே கேமரா மேனையும் அழைத்துக் கொண்டு நேராக தனது காதலியிடம் சென்ற அவர் வழக்கம் போல மோதிரத்தை காதல் பரிசாக நீட்டி ஒரு கால் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதனால் ஆச்சரியமும் எண்ணிலடங்காத உணர்ச்சி கலந்த மகிழ்ச்சியால் பொங்கிய அவரது காதலி ஒருசில வினாடிகள் பேச வார்த்தைகளின்றி “காதலை ஏற்றுக் கொள்கிறேன் தயவு செய்து எழுந்திருங்கள்” என்ற வகையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன் காதல் மோதிரத்தை தனது கையில் போட்டு விடுமாறு கூறும் வரை எழுந்திருக்காத கிஞ்சித் ஷா தனது காதல் வெற்றி அடைந்த மிகப்பெரிய மகிழ்ச்சியுடன் காதல் மோதிரத்தை அவரது கையில் போட்டு விட்டு கட்டிப்பிடித்து வெற்றியைக் கொண்டாடினார்.

அதை மைதானத்தில் இருந்து பார்த்த இதர ஹாங்காங் அணி வீரர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தி தங்களது அணி வீரருக்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தினர். இந்த தருணத்தை விடாத கேமராமேன் கச்சிதமாக படம் பிடித்து மைதானத்தின் பெரிய திரையில் ஒளிபரப்பியதால் மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும் இணைந்து இந்த காதல் ஜோடிக்கு கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் இந்த போட்டியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கௌதம் கம்பீர், இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அவர்களுக்கு ஆசிய கோப்பையை நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தற்போது 26 வயதாகும் கிஞ்சிட் ஷா கடந்த 2011 முதல் ஹாங்காங் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டராக இது வரை 10 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 700க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ள அவர் 18 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement