ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் விக்கெட் கீப்பராக களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அறிமுகமானது முதல் 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று இதுவரை சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 37 வயதில் கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு கட்டத்தில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து இந்த உலகக் கோப்பையில் இடம் பிடித்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் பொதுவாகவே சாதாரண போட்டிகளில் அசத்தும் தினேஷ் கார்த்திக் அழுத்தம் வாய்ந்த பெரிய போட்டிகளில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தாலேயே 2004இல் அறிமுகமானாலும் தோனியை மிஞ்ச முடியாமல் தனது கேரியரை தொலைத்தார். அதனால் கேரியரின் இந்த கடைசி வாய்ப்பிலாவது அசத்துவாரா என்று எதிர்பார்த்த தமிழக ரசிகர்களுக்கு மீண்டும் பெரிய ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
மீண்டும் சொதப்பல்:
ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பாண்டியாவுடன் இணைந்து அபாரமாக போராடிய விராட் கோலி அசாத்தியமான வெற்றியை உறுதி செய்தார். அதை கடைசி நேரத்தில் களமிறங்கி பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் ஒயிட் வலையில் சிக்கி ஸ்டம்பிங் ஆகி இந்தியாவின் வெற்றியை தாரை பார்க்க பார்த்தார். ஆனால் கடைசி பந்தில் களமிறங்கிய அஷ்வின் அதே தவறை செய்யாமல் லாவகமாக தூக்கி அடித்து எப்படி செயல்பட வேண்டுமென்பதை அவருக்கு காட்டினார்.
அதன்பின் நெதர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் பேட்டிங் செய்யாத அவர் விக்கெட் கீப்பராக எளிதாக கிடைத்த ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டு சொதப்பினார். அதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியில் ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்து தடுமாறிய போது சூரியகுமாருடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 6 (15) ரன்களில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி அவுட்டானார்.
அப்போட்டியில் செட்டிலான அவர் மட்டும் 10 – 15 ரன்களை எடுத்திருந்தால் கூட பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடிய இந்தியா நிச்சயம் வென்றிருக்கும். அப்படி தோல்விக்கு காரணமாக அமைந்ததால் அவரை அணியிலிருந்து நீக்கி விட்டு ரிசப் பணட்க்கு வாய்ப்பளிக்குமாறு வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொந்தளித்தனர். ஆனாலும் அவரை நம்பி ரோகித் சர்மா மீண்டும் வாய்ப்பளித்ததில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் பினிஷிங் செய்யத் தவறிய அவர் அழுத்தத்தில் 7 (5) ரன்களில் ரன் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தார்.
— LePakad7🇮🇳🇮🇹 (@AreBabaRe2) November 3, 2022
அதை விட 185 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸ் வெறும் 9 ரன்களில் இருந்த போது அர்ஷிதீப் சிங் வீசிய 2வது ஓவரில் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் கச்சிதமாக பிடிக்க தவறினார். அதாவது அவர் பந்தை பிடித்தும் ஒரு இன்ச்கள் முன்பாக பவுன்ஸ் ஆனதால் நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை. அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் என்ன செய்வார் என்று கேட்கிறீர்களா? அங்கு தான் சொதப்பல் உள்ளது.
ஆம் ஆஸ்திரேலியாவில் பெர்த் மைதானத்தில் இருக்கும் பவுன்ஸ் இப்போட்டி நடைபெற்ற அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் எப்போதுமே இருக்காது. அதை போட்டியின் முதல் சில ஓவர்களின் பந்துகளை விக்கெட் கீப்பராக பிடித்த போதே அவருடைய அனுபவத்திற்கு பவுன்ஸை சரியாக கணித்து ஒருசில அடிகள் முன்னதாக நின்றிருக்க வேண்டும். அப்படி நின்றிருந்தால் நிச்சயமாக அந்த கேட்ச்சை எளிதாக பிடித்திருக்கலாம்.
ஆனால் அந்த சிறிய விஷயத்தை கணித்து சிறப்பாக செயல்படத் தவறியதால் வெளுத்து வாங்கிய லிட்டன் தாஸ் 60 (27) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தார். நல்லவேளையாக ராகுல் ரன் அவுட் செய்ததால் தினேஷ் கார்த்திக் இந்த சர்ச்சையிலிருந்து தப்பி விட்டார். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு போட்டிக்கும் சொதப்பும் அவர் மீது தமிழக ரசிகர்களே அதிருப்தியடைந்து ரிஷப் பண்ட் பக்கம் சாயத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



