அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்துள்ள இவ்விரு நாடுகளும் ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டுமே மோதுகின்றன.
மேலும் 1992 முதல் தோல்வியடையாமல் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதன்முறையாக தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது. அதனால் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் வென்றாலும் மீண்டும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைந்து ஃபைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அதனால் அந்த தோல்விகளுக்கு இந்த உலக கோப்பையில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொழிந்த பாசமழை:
முன்னதாக அண்டை நாடுகள் என்பதால் இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்காக ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வார்கள். அதனாலேயே இவ்விரு அணிகள் மோதும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கூறலாம். ஆனால் ஒரு கட்டத்தில் கம்பீர் – அஃப்ரிடி போல சண்டையில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் இப்போதெல்லாம் இருதரப்பு தொடர்கள் நின்று விட்டதால் ஆசிய மற்றும் உலக கோப்பையில் நீண்ட நாட்கள் கழித்து பார்க்கும் போது பகையை மறந்து பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
குறிப்பாக வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்ற போது இந்திய வீரர்கள் சிரித்த முகத்துடன் அவர்களுக்கு கை கொடுத்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்களும் நண்பர்களைப் போல் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின் அதே துபாயில் சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்துக் கொண்ட போது உலகக்கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஷாஹீன் அப்ரிடியிடம் மனிதநேய அடிப்படையில் விராட் கோலி, ராகுல் போன்ற முக்கிய இந்திய வீரர்கள் காயத்தை பற்றி கேட்டறிந்தனர். அதேபோல் ஷாஹீன் அப்ரிடி, சடாப் கான் போன்றவர்கள் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த விராட் கோலி விரைவில் சதமடிக்க இறைவனை பிரார்த்திப்பதாக வெளிப்படையாகக் கூறினார்கள்.
அப்படி இந்தியாவும் பாகிஸ்தானும் நண்பர்களாக மாறிவரும் நிலையில் இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக அதில் பங்கேற்கும் 16 அணி கேப்டன்கள் பங்கேற்ற மெகா செய்தியாளர்கள் சந்திப்பு அக்டோபர் 14ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அப்போது ஆசிய கோப்பைக்கு பின் மீண்டும் சந்தித்துக்கொண்ட ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகியோர் வழக்கமான கிரிக்கெட் பற்றி பேசாமல் குடும்பம் எப்படி உள்ளது என்று நலம் விசாரித்துக் கொண்டதாக வெளிப்படையாக தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா தமக்கு வயதில் மூத்த அண்ணனை போன்றவர் என்ற வகையில் பாபர் அசாம் வெளிப்படையாக பேசினார்.
— Guess Karo (@KuchNahiUkhada) October 15, 2022
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா என்னைவிட வயதில் மூத்த அண்ணனை போன்றவர். அதனால் நீண்ட காலமாக விளையாடி ஏராளமான அனுபவம் கொண்டுள்ள அவரிடம் முடிந்தளவுக்கு நான் கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன்” என்று கூறினார். அதற்கு எப்போதும் கிரிக்கெட்டை பேசாமல் குடும்பத்தைப் பற்றியும் இதர விஷயங்களை பற்றியும் பாபரிடம் பேசியதாக ரோகித் சர்மா கூறியது பின்வருமாறு.
“பாபர் சொன்னது போல் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் அதற்காக ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றியே பேசி அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஆசிய கோப்பைக்கு பின்பு இப்போது பாகிஸ்தான் வீரர்களை சந்தித்துள்ளோம். அப்போது உங்களது வீட்டில் குடும்பத்தினர் எப்படி உள்ளார்கள் என்பதைப்பற்றி பேசினோம். எங்களுக்கு முந்தைய கிரிக்கெட் வீரர்களும் இதையே பேசியதாக தெரிவித்தனர். மேலும் உங்களுக்கு ஊரில் என்ன நடக்கிறது, வாழ்க்கை எப்படி போகிறது, நீங்கள் எந்த புதிய கார் வாங்கினீர்கள் என்பதையே பாகிஸ்தான் வீரர்களிடம் நாங்கள் பேசுவோம்” என்று கூறினார்.



