ஆஹா என்ன ஒரு சூப்பர் ஐடியா, ஓவர் ரேட் பிரச்சனைக்கு தீர்வை கண்டுள்ள ஆஸ்திரேலிய – ரசிகர்கள் பாராட்டு

Aus Fielding
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் முதல் சுற்று முடிந்த சூப்பர் 12 சுற்றுகள் துவங்கியுள்ளன. இதையடுத்து அக்டோபர் 22ஆம் தேதி துவங்கும் சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த உலகக்கோப்பையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட சில விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று ஐசிசி கறாராக தெரிவித்துள்ளது.

அதிலும் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறம் இருக்கும் வெள்ளை கோட்டை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்வதில் எந்தத் தவறுமில்லை என்று தெரிவித்துள்ள ஐசிசி அதற்காக விமர்சிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போலவே குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிப்பதற்கான விதிமுறையும் ஐசிசி மிகவும் கடினமாக்கியுள்ளது. ஆம் பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் பந்து வீசும் அணி 20 ஓவர்களை நிர்ணயிக்கப்படும் 80 நிமிடத்திற்குள் வீசி முடிக்க வேண்டும்.

- Advertisement -

சூப்பர் ஐடியா:
ஆனால் பெரும்பாலான அணிகள் பரபரப்பான சூழ்நிலைகளில் யோசித்து திட்டமிட்டு பந்து வீசுவதால் தங்களை அறியாமலேயே அதிக நேரங்களை எடுத்துக் கொள்கின்றனர். அதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை தாமதமாவதால் ரசிகர்கள் முன்னதாகவே வீட்டுக்கு கிளம்ப முடியாத நிலைமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஐசிசி நிர்ணயிக்கப்பட்ட 80 நிமிடத்திற்குள் ஒரு அணி 20 ஓவர்களை வீசி முடிக்க தவறினால் அதற்கு அப்போதே தண்டனையாக எஞ்சியிருக்கும் தாமதிக்கப்பட்ட ஓவர்களில் உள்வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டர் குறைக்கப்படுவார் என்ற அதிரடியான விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

இதற்காக ஆரம்ப காலங்களில் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில் அதை கட்டி விட்டு மீண்டும் மீண்டும் அனைத்து அணிகளும் அதே தவறை செய்து வந்தன. ஆனால் இந்த புதிய விதிமுறை வந்தபின் ஒரு ஃபீல்டர் வெளியே குறைக்கப்படுவதால் பந்து வீசும் அணி நிறைய பின்னடைவுகளை சந்திக்கிறது. அதனால் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த மாற்றம் தற்போது நல்ல பலனை கொடுத்து வருகிறது. அதன் காரணமாக அனைத்து அணிகளும் இந்த விதிமுறையை பின்பற்றி நேரத்துக்குள் பந்து வீசி முடிக்க போராடுகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓவர் ரேட் பிரச்சினையை தவிர்ப்பதற்காக தங்களுடைய அணி பந்து வீசும் போது எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அடித்தால் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களும் பயிற்சியாளர்களும் மைதானத்தின் நாலா புறமும் நின்று அடுத்த நிமிடமே பந்தை மைதானத்திற்குள் தூக்கிப்போடும் முறையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படி செய்வதால் களத்தின் நடுவே இருக்கும் வீரர்கள் பவுண்டரி எல்லை வரை சென்று பந்தை எடுத்துப் போடும் நேரம் மிச்சமாகிறது.

அந்த வகையில் எதிரணி குறைந்தது 10 – 15 பவுண்டரிகள் அடிக்கும் போது ஒரு பந்துக்கு அரை நிமிடம் என்று வைத்தால் கூட 5+ நிமிடங்கள் மிச்சமாகி 80 நிமிடத்திற்குள் பந்து வீசி முடிக்க இம்முறை உதவுகிறது. இதனால் களமிறங்கி விளையாடும் வாய்ப்பு பெறாவிட்டாலும் அணியின் நலனுக்காக பெஞ்சில் உள்ள வீரர்கள் இப்படியும் வெற்றிக்கு பங்காற்ற முடியும் என ஆஸ்திரேலிய நிர்வாகம் கூறுகிறது. சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரிலிருந்து இந்த முறையை கடைபிடித்து வரும் ஆஸ்திரேலிய அணியின் இந்த புதுமையான ஐடியாவை பாராட்டும் ரசிகர்கள் இதர் அணிகளும் பின்பற்றுவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இது பற்றி ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்டன் அவர் பேசியது பின்வருமாறு. “பவர் பிளே ஓவர்களில் நிச்சயமாக பந்துகள் பறக்கும் என்பதால் அதை வீரர்கள் சென்று எடுக்க வேண்டியது கிரிக்கெட்டின் அங்கமாகும். ஆனால் அதற்கான நேரத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாகும். அதற்கு பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்கள் உதவும் போது உங்களுக்கு 10 நொடிகள் மிச்சமாகிறது. ஏனெனில் போட்டியில் வெல்வதற்காக நீங்கள் கடினமாக உழைத்து கடைசியில் ஓவர் ரேட் பிரச்சனையை சந்தித்தால் அது உங்களது வெற்றியில் சாதகத்தை கொடுக்காது. எனவே இந்த முறையை நாங்கள் குறைந்தது பவர்ஃபிளே ஓவர்களில் செய்கிறோம்” என்று கூறினார்.

Advertisement