இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் ஆஸி, ரெக்கையுடன் சூப்பர்மேனாக பறந்து ஃபீல்டிங்கில் மிரட்டிய வீரர் – குவியும் லைக்ஸ்

Ashton Agar Catch
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து 2010க்குப்பின் 2வது கோப்பை வென்று சரித்திரம் படைத்த நிலையில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கிய ஆஸ்திரேலியா நூலிலையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கோட்டை விட்டு அவமானத்தை சந்தித்தது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் சந்தித்த பெரிய தோல்வியும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கை விடப்பட்டதும் அந்த அணியின் உலகக் கோப்பை கனவை தகர்த்தது.

அந்த நிலையில் டி20 உலக கோப்பையை முடித்து விட்டு தொடர்ந்து அங்கேயே இருக்கும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. நவம்பர் 17ஆம் தேதியன்று துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை ஒரு வேகப்பந்து வீச்சாளரான பட் கமின்ஸ் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டு தலைமை தாங்கினார். புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அவர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 287/9 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சூப்பர்மேன் பீல்டிங்:
ஜேசன் ராய் 6, ப்லிப் சால்ட் 14, ஜேம்ஸ் வின்ஸ் 5, சாம் பில்லிங்ஸ் 17, கேப்டன் ஜோஸ் பட்லர் 29 என முக்கிய வீரர்கள் ஆரம்ப முதலே ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணிக்கு அதிகபட்சமாக சதமடித்த டேவிட் மாலன் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 134 (128) ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த இன்னிங்ஸ்சில் சதமடித்த மாலன் பட் கமின்ஸ் வீசிய 45வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

அதிரடியான வேகத்துடன் வலுவாக அடித்ததால் மிட் விக்கெட் திசை நோக்கி பறந்த அந்த பந்தை அப்பகுதியில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் அஷ்டன் அகர் கேட்ச் பிடிப்பதற்காக சூப்பர் மேன் போல் ரெக்கை கட்டி பறந்தார் என்றே கூறலாம். ஏனெனில் பந்தை சரியாக கணித்து தாவிய அவர் அதை கச்சிதமாக பிடித்தார். ஆனாலும் பேலன்ஸ் செய்ய முடியாது என்பதை காற்றில் பறந்தவாரே உணர்ந்த அவர் அந்த ஒரு சில நொடி பொழுதுக்குள் மீண்டும் பந்தை அதுவும் தனது முதுகின் பின்புறத்தில் இருந்து மைதானத்திற்குள் தூக்கி எறிந்தார். அந்த வகையில் அற்புதமாக ஃபீல்டிங் செய்து சூப்பர்மேனாக செயல்பட்ட அவர் இயற்கையின் புவியீர்ப்பு விசையை வெல்ல முடிய வில்லை என்றாலும் இங்கிலாந்தின் சிக்சரை தடுத்து நிறுத்தி 5 ரன்கள் மிச்ச படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

அதை பார்த்து ஒட்டுமொத்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று அவரை பாராட்டிய நிலையில் தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஜாம்பவான் ஆடம் கில்கிரிஸ்ட் உள்ளிட்ட வர்ணையாளர்கள் குழு வியந்து பாராட்டினார்கள். அதை தொடர்ந்து 288 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு 147 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த ட்ராவிஸ் ஹெட் 69 (57) ரன்களும் டேவிட் வார்னர் 86 (84) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அதை வீணடிக்காமல் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 80* (78) ரன்கள் குவித்ததால் 46.5 ஓவரிலேயே 291/4 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் உலக கோப்பைக்கு முன்பாக நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க துவங்கியுள்ள ஆஸ்திரேலியா நவம்பர் 19ஆம் தேதியன்று நடைபெறும் இத்தொடரின் 2வது போட்டியில் களமிறங்குகிறது.

Advertisement