துலீப் ட்ராபி : நடத்தை தவறிய சக அணி இளம் வீரரை வெளியேற்றி ஸ்ட்ரிக் காட்டி கோப்பையை வென்ற கேப்டன் ரகானே – நடந்தது என்ன

Rahane
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை 2022 தொடரின் ஃபைனல் செப்டம்பர் 21ஆம் தேதியன்று கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற மேற்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்சில் 270 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹெட் படேல் 98 ரன்களும் உனட்கட் 46 ரன்களும் எடுத்தனர். தெற்கு மண்டலம் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக தமிழகத்தின் சாய் கிசோர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டலம் சிறப்பாக செயல்பட்டு 327 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் சதமடித்து 118 ரன்களும் மணிஷ் பாண்டே 48 ரன்களும் எடுத்தனர். அதனால் 57 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது சிம்ம சொப்பனமாக மாறிய இளம் தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் நங்கூரத்தை போட்டு அபாரமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

மிரட்டிய ஜெய்ஸ்வால்:
எதிர்புறம் பிரியங் பஞ்சல் 40, கேப்டன் ரகானே 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் விஸ்வரூபம் எடுத்து தெற்கு மண்டல பவுலர்களை பந்தாடிய அவர் சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும் சர்பிராஸ் கான் 11 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 127* ரன்கள் எடுத்தனர். மறுபுறம் தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 30 பவுண்டரி 4 சிக்சர்களுடன் இரட்டை சதமடித்து 265 ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் ஹெட் படேல் 51* ரன்கள் எடுத்ததால் கொதித்தெழுந்த மேற்கு மண்டலம் தங்களது 2வது இன்னிங்சை 585/4 ரன்களில் டிக்ளேர் செய்தது.

அதை தொடர்ந்து 529 என்ற மெகா இலக்கை துரத்திய தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 234 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க வீரர் குண்ணும்மால் 93 ரன்களும் ரவி தேஜா 53 ரன்களும் எடுக்க ஏனைய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அதனால் 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மேற்கு மண்டலம் துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

ரகானேவின் கண்டிப்பு:
முன்னதாக இப்போட்டியில் 529 ரன்களை சேசிங் செய்யும் போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாறிய தனது அணியை 53 ரன்கள் எடுத்து போராடிய தெற்கு மண்டல வீரர் ரவி தேஜா பேட்டிங் செய்த போது அவரது அருகே நின்று மேற்கு மண்டல வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது 50வது ஓவரில் அவரது கவனத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெய்ஸ்வால் சில வார்த்தைகளை உபயோகித்து ஸ்லெட்ஜிங் செய்தார்.

அதனால் கடுப்பான ரவி தேஜா நேரடியாக நடுவர் மற்றும் எதிரணி கேப்டன் ரகானேவிடம் புகார் செய்தார். அதனால் நடுவர் எச்சரிக்கை கொடுத்த நிலையில் ரகானேவும் கேப்டன் என்ற முறையில் ஜெய்ஸ்வாலிடம் அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று கண்டிப்பு செய்தார். ஆனால் அவரது கண்டிப்பையும் மீறி ஜெய்ஸ்வால் மீண்டும் ஸ்லெட்ஜிங் செய்ததால் மீண்டும் ரவி தேஜா புகார் கொடுத்தார்.

அதனால் பொறுமையிழந்த ரகானே வெற்றியை விட நன்னடத்தை முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். அதனால் சில ஓவர்கள் மேற்கு மண்டலம் 10 வீரர்களுடன் பீல்டிங் செய்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பி பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்திடம் திட்டு வாங்கி மனம் திருந்திய யஎஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் பீல்டிங் செய்ய வந்தார். இப்போட்டியில் பேட்டிங்கில் ரன்களை எடுக்க தவறினாலும் கேப்டனுக்கு முன்னுதாரணமாக இளம் வீரரிடம் கண்டிப்புடன் நடந்து கொண்ட ரகானேவின் கேப்டன்ஷிப் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் வெற்றியை விட எதிரணியையும் நடுவர்களையும் மதிப்பதே முக்கியம் என்று நம்புவதாக போட்டி முடிந்த பின் இந்த நிகழ்வு பற்றி ரகானே தெரிவித்தார். இதே கேப்டன்ஷிப் வாயிலாக கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே பார்டர் – கவாஸ்கர் கோப்பையை அவர் வென்று காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இந்த பாடத்தை கற்றுக் கொண்ட ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement