ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையின் 2வது லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் வெற்றிக்கு சரிசமமாக முழுத் திறமையை வெளிப்படுத்தி போராடியதால் அனல் பறந்த அந்த போட்டியில் கடைசி ஓவரில் இந்தியா போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முதுகெலும்பு மற்றும் கேப்டன் பாபர் அசாம் 10, பகார் ஜமான் 10 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 43 (42) ரன்களை எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும் எடுத்தனர். அதை தொடர்ந்து 148 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அனுபவத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 12 (18) ரன்களும் விராட் கோலி 35 (34) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தக்க பதிலடி:
அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டாகி சென்றதால் 89/4 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா – ஹர்திக் பாண்டியா ஆகியோர் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். அதில் நிதானத்தை காட்டிய ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (29) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடி காட்டிய பாண்டியா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (17) ரன்களை விளாசி 19.4 ஓவரில் 148/5 ரன்களை எட்ட வைத்து வெற்றிபெற வைத்தார்.
அதனால் இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கிய இந்தியா கடந்த வருடம் இதே மைதானத்தில் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக படுதோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து இந்திய ரசிகர்களை தலைநிமிர வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு நிறைய வீரர்கள் முக்கிய பங்காற்றினாலும் 3 விக்கெட்டுகளும் 33* ரன்களும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்:
முன்னதாக கடந்த வருடம் சந்தித்த தோல்வியால் பெரிய அவமானத்தை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்தியா கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருந்து இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்தது. அதனால் மிகவும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்த இந்திய ரசிகர்கள் இந்த சிறப்பான வெற்றியை நேற்றிரவு மைதானத்திலும் வீடுகளிலும் தெருக்களிலும் இறங்கி கொண்டாடினார்கள்.
மறுபுறம் இந்தியாவிடம் போராடி தோல்வியடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் தலை நிமிர முடியாமல் ஷாஹீன் அப்ரிடி இல்லை, வெறும் 148 ரன்களை சேசிங் செய்ய 20 ஓவர்கள் தேவைப்பட்டது என்பது போன்ற சமாளிக்கும் கருத்துகளை இந்திய ரசிகர்களுக்கு பதிலளித்து நழுவுகிறார்கள். ஆனால் இந்தியாவின் இந்த சிறப்பான வெற்றியை மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தங்களது நாட்டு வெற்றியை போல் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிஞ்சிய ஆப்கன் ரசிகர்கள்:
ஆம் அனல் பறந்த இந்த போட்டியை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சில ரசிகர்கள் குழுவாக இணைந்து தங்களது வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து வெற்றிபெற வைக்கும் போது ஒரு தீவிர ஆப்கானிஸ்தான் இந்திய ரசிகர் மட்டும் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கையை உயர்த்தி கொண்டாடுகிறார். அதோடு நிற்காமல் தொலைக்காட்சியின் அருகே சென்ற அவர் பாகிஸ்தானை தோற்கடித்த பாண்டியாவுக்கு அன்பு கலந்த முத்தத்தை பரிசளித்தது அந்த அறையில் இருந்த எஞ்சிய ரசிகர்களின் முகத்தில் வியப்பையும் புன்னகையையும் ஏற்படுத்தியது.
அண்டை நாடு என்ற வகையில் கடந்த பல வருடங்களாக ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு சார்பில் நிறைய பொருளாதார உதவிகளும் அணைகள், சாலைகள் போன்ற உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மறுபுறம் பாகிஸ்தானிலிருந்து அவ்வப்போது தங்களது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான செயல்கள் நடைபெறுவதாலேயே இப்படி ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடுவதாக இந்திய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.



