சாதனை படைத்த விராட் கோலியை வாழ்த்திய ரோஹித் உள்ளிட்ட இந்திய வீரர்கள் – 3 தெ.ஆ ஜாம்பவான்கள் பாராட்டி பேசியது இதோ

- Advertisement -

ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்கும் ஆசிய கோப்பை போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் துவங்கியது. அந்த போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய மற்றும் ஆசிய வீரர் என்ற இரட்டை சாதனைகளைப் படைத்தார். கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற கேப்டனாக சீனியர் அணியில் அறிமுகமான அவர் 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி நிறைய வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்து 33 வயதிலேயே தன்னை ஜாம்பவனாக நிரூபித்துள்ளார்.

களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் சதமடிப்பார் என்று உலகமே எதிர்பார்க்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டுள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்தாலும் அதை மிஞ்சும் ஆதரவுகளையும் பெற்று வருகிறார். மேலும் ஒரு மாதம் ஓய்வெடுத்த நல்ல புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் அவர் இந்த போட்டியின் வாயிலாக 100 டி20 போட்டிகளில் விளையாடிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

- Advertisement -

குவியும் வாழ்த்துக்கள்:
உலக அளவில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லருக்குப் பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய வீரராக சாதித்துள்ள அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக ஒரு போட்டியில் விளையாடுவதே பல வீரர்களுக்கு சவாலாக இருக்கும் நிலையில் 3 வெவ்வேறு வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடுவதெல்லாம் சாதனையிலும் மிகப்பெரிய சாதனையாகும்.

அதற்கு காயத்தையும் சவால்களையும் விமர்சனங்களையும் கடந்து தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி அனைத்தையும் கடந்து இந்த வயதிலேயே இப்படி ஒரு பிரம்மாண்ட சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் ஒன்று சேர்ந்து கைதட்டி பாராட்டினர். மேலும் அவரை மனதார பாராட்டிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருடைய பசியையும் ஆர்வத்தையும் யாராலும் பொருத்த முடியாதது. ஒவ்வொரு முறையும் அவர் களமிறங்கும் போது வெவ்வேறு எனர்ஜியுடன் வருவார். இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடுவது உண்மையாகவே எளிதானதல்ல. எனவே அவருக்கு நான் மனதார வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இது பெரிய சாதனையாகும். ஒவ்வொரு போட்டியிலும் வேற லெவலில் விளையாடும் அவர் இந்த ஆசிய கோப்பையிலும் அசத்துவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

அதேபோல் ஹர்திக் பாண்டியா பாராட்டி பேசியது பின்வருமாறு. “சாதனைகளை விட்டுவிடுங்கள், இத்தனை போட்டிகளில் விளையாடுவதே முதலில் பெரிய சாதனையாகும். இதை அனைவரும் நீண்ட காலம் மனதில் வைத்திருப்பார்கள். ஏனெனில் இதை யாரும் அவ்வளவு சீக்கிரம் செய்ய முடியாது. அதாவது தற்போதைய நவீன கிரிக்கெட்டில் அவரைப்போன்ற ஆர்வம் கொண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது கடினமாகும்” என்று கூறினார்.

- Advertisement -

அவர்களுடன் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற இதர இந்திய நட்சத்திரங்களும் மனதார வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடி சிறந்த நண்பராக இருக்கும் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் இந்த சாதனையை பாராட்டி பேசியது பின்வருமாறு. “இந்த வாய்ப்பில் என்னுடைய நல்ல நண்பர் விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியராக சாதனை படைத்தற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். என்ன ஒரு மிகப்பெரிய சாதனை விராட், உங்களால் நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம். உங்களுடைய 100வது டி20 போட்டிக்கு எனது வாழ்த்துக்கள், அதை நான் பார்ப்பேன்” என்று கூறினார்.

மேலும் பெங்களூருவின் கேப்டனான தென்னாப்பிரிக்காவின் டு ப்லஸ்ஸிஸ் பாராட்டி பேசியது பின்வருமாறு. “ஹேய் விராட். 100வது டி20 போட்டிக்காக மட்டுமல்லாமல் 3 வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியராக சாதனை படைத்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இது உங்களுடைய சாதனைப் பட்டியலில் ஒன்றாக இணைந்துள்ளது. அடுத்த சில வருடங்களில் நீங்கள் என்ன ஸ்பெஷலாக விளையாடப் போகிறீர்கள் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களிடம் இன்னும் நிறைய சாதனைகள் எஞ்சியுள்ளது என்பது எனக்கு தெரியும். ஆசிய கோப்பையில் உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

அதேபோல் தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் பாராட்டி பேசியது பின்வருமாறு. “இந்த சாதனைகளை விட அவர் மிகச் சிறந்த போட்டியாளர் ஆவார். உலகிலேயே அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சேசிங் மெஷின். 58 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ள அவர் அனைத்தையும் சேசிங் செய்து விடுவார்”

“குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர் மெஷின் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 இரட்டை சதங்களை அடித்துள்ளார். சங்ககாராவையும் சேர்த்து அவரை விட இருவர் மட்டுமே அதிகமாக அடித்துள்ளனர். எனவே ரன்கள் அடிப்பதில் மெசினாக செயல்படும் அவருக்கு 100வது டி20 போட்டியில் விளையாடுவதற்காக வாழ்த்துக்கள். விராட் நீங்கள் உலகிலேயே அன்பானவர்களில் ஒருவர். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சிறப்பாக செயல்படுங்கள்” என்று கூறினார்.

Advertisement