தம்மை மிகவும் இம்ப்ரெஸ் செய்த 11 வயது குட்டி எக்ஸ்பிரஸ் பவுலர் – நேரடியாக எதிர்கொண்டு பாராட்டிய ரோஹித் சர்மா, வீடியோ உள்ளே

Rohit Sharma Fan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்ற இந்தியா சமீபத்தில் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்கு உள்ளானது.

அத்துடன் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் அனைத்து நேரங்களிலும் அபாரமாக பந்து வீசி வெற்றியை திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் குறைகளை நிறையாக்கி இத்தொடரில் வெற்றி வாகை சூடுவதற்காக முன்னதாகவே ஆஸ்திரேலியா பயணித்த இந்திய அணியினர் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகிய அம்சங்களுக்கு இயற்கையாகவே கொடுக்கக்கூடிய பெர்த் நகரில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற வாக்கா மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

- Advertisement -

11 வயது எக்ஸ்பிரஸ்:
அதன் ஒரு பகுதியாக மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த மைதானத்தில் களமிறங்கி முதல் பயிற்சிப் போட்டியில் வென்ற இந்தியா 2வது பயிற்சி போட்டியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் தோல்வியடைந்தது. அது போக அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை சந்திப்பதற்கு முன்பாக நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக மேலும் 2 பயிற்சி போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது.

அதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சி எடுத்த அதே பெர்த் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பள்ளி குழந்தைகளை பார்வையிட்டனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் இடது கை வேகப்பந்து வீச்சாளராக எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசியதை பார்த்து வியப்படைந்த கேப்டன் ரோகித் சர்மா தமக்கு எதிராக வலைப்பயிற்சியில் பந்து வீசுமாறு அழைத்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துருஷில் சௌகான் எனும் 11 வயதுடைய அந்த சிறுவன் வீசிய பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா அவரது திறமையை உணர்ந்து பெர்த் நகரிலேயே இருந்தால் எப்படி இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவீர்கள் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அதாவது விரைவில் இந்தியாவுக்கு வந்து இந்தியாவுக்காக விளையாடும் முயற்சிகளை செய்யுமாறு தம்மை பாராட்டியதாக அந்த சிறுவன் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய அணியின் வீடியோ அனலிஸ்ட் ஹரி மோகன் விவரித்தது பின்வருமாறு. “வாக்கா மைதானத்தில் பயிற்சி செய்ய நாங்கள் நுழைந்தபோது நிறைய குழந்தைகள் தங்களது பயிற்சிகளை நிறைவு செய்தனர். அப்போது நாங்கள் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடுவதை கண்டோம். அதில் ஒரு குழந்தை மட்டும் ரோகித் சர்மாவின் கண்களை ஈர்த்தார்”

“அந்த சிறுவன் 2 – 3 பந்துகளை வீசிய போதே இயற்கையிலேயே அவருக்குள் இருக்கும் திறமை வெளிப்பட்டது. அதை கவனித்த ரோகித் சர்மா உடை மாற்றும் அறையிலிருந்து சென்று அந்த சிறுவனிடம் சில பந்துகள் தமக்கு எதிராக வீசுமாறு அழைத்தார். அதைப் பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் இந்திய கேப்டனுக்கு எதிராக பந்து வீசியது அந்த சிறுவனுக்கும் மறக்க முடியாத நிகழ்வாகும்” என்று கூறினார்.

இது பற்றி சிறுவன் துருஷில் சௌகான் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா என்னை பார்த்து அவருக்கு எதிராக பந்து வீசுமாறு அழைத்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவருக்கு எதிராக பந்து வீசுவது கடினமென்று அதற்கு முந்தைய நாளில் என்னுடைய தந்தை தெரிவித்தார். அதனால் நான் மிகவும் ஆர்வமடைந்தேன். மேலும் எனக்கு இன்ஸ்விங்கிங் யார்கார் பந்துகள் மிகவும் பிடிக்கும். அதன் பின் எனது பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா பெர்த் நகரிலேயே இருந்தால் நீங்கள் எப்படி இந்தியாவுக்கு விளையாட முடியும்? என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் முழு தகுதி பெற்றதும் இந்தியாவுக்கு வந்து இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று அவரிடம் கூறினேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement