இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று டிசம்பர் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எதிர்வரும் 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.
இந்த 2 பேருக்கு ஏன் இடமில்லை? : வாசிம் ஜாபர் கேள்வி
மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப் போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் எழுந்துள்ளது. அதேவேளையில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி இந்த தொடரை தங்களது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து முன்னாள் வீரர்கள் பலரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாட வேண்டிய வீரர்கள் அணியில் சேர்க்கப்படாதது ஏன்? என்பது குறித்து தங்களது கேள்விகளை முன் வைத்து வருகின்றார்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபரும் தனது பங்கிற்கு சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரை இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஏன் தேர்வு செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
சுப்மன் கில் பார்மில் இல்லாத வேளையில் இஷான் கிஷனை அணிக்குள் ஏன் கொண்டுவர வேண்டும். கடந்த ஒரு ஆண்டாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த இடத்திற்காக காத்திருக்கிறார். அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா கடந்த பல தொடர்களாகவே சிறப்பாக விளையாடி வந்த வேளையில் அவரை ஏன் அணியிலிருந்து நீக்க வேண்டும்? என்று புரியவில்லை. அவர்தான் டி20 உலக கோப்பை தொடருக்கான முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக இருந்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : ஷிவம் தூபேவிற்கு இதுவே கடைசி டி20 உலககோப்பை தொடர்.. ஏன் தெரியுமா? – காரணம் இதோ
இப்படி வாய்ப்புக்காக காத்திருக்கும் தகுதி உடைய இரண்டு வீரர்களை நீக்கியது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்றும் அவர்களுக்கு பதிலாக இவர்கள் இருவரையும் கண்டிப்பாக சேர்த்திருக்க வேண்டும் என்றும் வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.



