இந்தியா உள்ளூர் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்த வாஸிம் ஜாபர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மும்பை அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய அவர் தற்போது விதர்பா அணிக்காக ஆடும் போது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ளார் . அவருக்கு தற்போது 41 வயதாகிறது.

மொத்தமாக 260 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள வாஸிம் ஜாபர் 19410 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 50.67 ஆகும் மொத்தம் 57 சதங்களையும், 93 அரை சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 314 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணிக்காக மொத்தம் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1944 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 11 அரை சதங்களும் அடங்கும். அதற்குப் பின்னர் இந்திய அணிக்கு விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இரட்டை சதம் விளாசியுள்ளார். இங்கே இவர் அடித்த 212 ரன்கள்தான் இவரது அதிகபட்ச ரன் ஆகும்.

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாசிம் ஜாபர் குறிப்பிட்டதாவது : எனது பள்ளி நாட்களிலிருந்து இப்பொழுது கிரிக்கெட் விளையாடி முடிக்கும்வரை எனது திறமைக்கு முடிந்தவரை விளையாடி விளையாடி உள்ளேன். அவற்றிற்காக உதவிய எனது பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் மீது நம்பிக்கை காட்டிய தேர்வாளர்கள், சக வீரர்கள், கேப்டன்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து கூறியுள்ள ஜாஃபர் இந்தியாவுக்காக நான் விளையாடுவது என் தந்தையின் கனவு. அந்த கனவினை நிறைவேற்றியதால் நான் பெருமை கொள்கிறேன்.

கிரிக்கெட்டில் இத்தனை ஆண்டுகள் கழித்து நான் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். எனவே அடுத்ததாக வாழ்க்கை எனும் இரண்டாவது இன்னிங்சை நான் பயிற்சியாளராகவும், வர்ணனனையாளராகவும் தொடரலாம் என்று யோசித்துள்ளேன். மேலும் கிரிக்கெட் உடனே எப்பொழுதும் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



