
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் துவங்கியது. இந்த தொடரின் லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் மார்ச் 9-ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியுடன் இந்த தொடரானது முடிவுக்கு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை மார்ச் ஒன்பதாம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு இந்த இறுதி போட்டியானது துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு அடுத்து மிகச்சிறப்பாக விளையாடி வரும் அணியாக பார்க்கப்படும் நியூசிலாந்து அணி இவ்வளவு தூரத்திற்கு முன்னேற காரணமே மகேந்திர சிங் தோனி தான் என்கிற வித்தியாசமான ஒரு கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக மிட்சல் சான்ட்னரின் கேப்டன்சி தான் பார்க்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணியில் தோனியின் கீழ் சான்ட்னர் விளையாடியதால் தான் தற்போது கேப்டனாக அவர் மெறுகேரி இருக்கிறார். தோனியின் தலைமையின் கீழ் பல ஆண்டுகளாக அவர் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து வந்தார்.
இதன்மூலம் தோனியை அருகில் இருந்து கவனித்து வந்த அவருக்கு நிறைய பலன்கள் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஒருவர் அருகே இருந்து நாம் பல ஆண்டுகள் ஒரே விஷயத்தை கவனித்தால் அவர்களிடம் இருந்து நாம் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள முடியும். அப்படித்தான் மிட்சல் சான்ட்னரும் தோனியின் அருகில் இருந்து அவர் எப்படி கேப்டன்சி செய்கிறார்? எப்படி பௌலர்களை மாற்றுகிறார்? எப்படி தேவைக்கு ஏற்ப கள வியூகத்தை அமைக்கிறார்? என்பது போன்ற பல்வேறு விடயங்களை நுணுக்கமாக கவனித்திருக்கிறார்.
இதையும் படிங்க : விராட் கோலி கேப்டனா இருந்தாலும் தோனி தான் இந்திய வீரர்களுக்கு அந்த கட்டளையை விதித்தார் – ரவி சாஸ்திரி தகவல்
அதன் காரணமாகவே மிட்சல் சான்ட்னரால் இந்த தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி கேன் வில்லியம்சன் போன்ற ஒரு அனுபவ வீரரும் அவர் அருகில் இருப்பதால் தற்போது நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறது என வாசிம் ஜாஃபர் கூறியது குறிப்பிடத்தக்கது.