IPL 2023 : கேப்டன்னு வெளிய சொல்லாதீங்க, உங்க இன்னிங்ஸ் பாத்ததே பெரிய வலி – இந்திய வீரர் மீது வாசிம் ஜாபர் அதிருப்தி

Jaffer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் அதிரடியாக விளையாடி நிலையான இடத்தை பெற்று 17 கோடி என்ற உச்சகட்ட சம்பளத்தை பெற்ற ராகுல் சமீப காலங்களாகவே குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருவது நிறைய விமர்சனங்ஜை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக செயல்பட்டதால் துணை கேப்டன்ஷிப் மற்றும் ஓப்பனிங் இடத்தை இழந்துள்ள அவர் அதை மீட்டெடுக்க இந்த ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறார்.

KL Rahul 1

- Advertisement -

ஆனால் முதல் 3 போட்டிகளில் 8 (12), 20 (18), 35 (31) என மீண்டும் அதே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் பெங்களூருவுக்கு 213 ரன்களை துரத்தும் போது கெய்ல் மேயர்ஸ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து 23/3 என லக்னோ தடுமாறிய போது நிதானமாக பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும் அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக 65 (30) ரன்கள் குவித்து சரிவை சரி செய்ததை எதிர்ப்புறம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அவர் 11.1 ஓவர்கள் வரை நன்கு செட்டிலாகியும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 18 (20) ரன்களில் அவுட்டாகி அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

வெளிய சொல்லாதீங்க:
நல்லவேளையாக அவர் அவுட்டானதால் அடுத்து வந்து அடித்து நொறுக்கிய நிக்கோலஸ் பூரான் 62 (19) ரன்கள் குவித்ததுடன் கடைசி நேரத்தில் பெங்களூரு சொதப்பியதால் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது. ஆனால் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கும் அளவுக்கு ஃபிளாட்டான பிட்ச்சையும் தொட்டாலே சிக்சர்கள் பறக்கக்கூடிய சிறிய பவுண்டரிகளையும் கொண்ட சின்னசாமி மைதானத்தில் கூட கடைசி வரை மெதுவாக விளையாடிய ராகுல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

KL-Rahul

இந்நிலையில் 213 ரன்களை துரத்தும் போது கேப்டனாக முன்னின்று அதிரடி காட்ட வேண்டிய கேஎல் ராகுல் மெதுவாக விளையாடிய இன்னிங்ஸை பார்த்தது வலியை கொடுத்ததாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் விமர்சித்துள்ளார். குறிப்பாக கேப்டன் என்று வெளியே சொல்லிக் கொள்ளாதீர்கள் என்ற வகையில் மறைமுகமாக விமர்சித்த அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அதே சமயம் வலியாகவும் இருந்தது. ஏனெனில் 213 ரன்களை துரத்தும் போது அணியின் கேப்டனாக இருக்கும் நீங்கள் தான் முன்னின்று அதிரடியாக விளையாட வேண்டும்”

- Advertisement -

“எனவே ராகுல் தன்னுடைய இந்த மெதுவான அணுகு முறையை மாற்ற வேண்டும். இந்த சீசனில் தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா ஆகியோர் இதுவரை அதிரடியாக விளையாடவில்லை. மேலும் லக்னோவின் பேட்டிங் வரிசை ஆழமாகவும் இருக்கிறது. அப்படி பேக்-அப் தயாராக இருக்கும் போது ராகுல் எதற்கும் பயப்படாமல் அதிரடி காட்ட வேண்டும். ஏனெனில் ராகுல் அவுட்டானால் லக்னோ வெற்றி பெறாது என்ற நிலைமை அந்த அணியில் இல்லை. இதற்கு முன் ராகுல் அதிரடியாக விளையாடியதை பார்த்துள்ளோம்”

KL Rahul Wasim Jaffer

“ஆனால் ஐபிஎல் தொடரில் உங்களது அணிக்காக நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு விளையாடுவது எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேனையும் பெவிலியனில் அடுத்ததாக வருவதற்கு காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் மீதும் ஏராளமான அழுத்தத்தை ஏற்படுத்தும்”

இதையும் படிங்க:வீடியோ : போதும்யா ஓவரா புகழாத, திலக் வர்மாவை கலாய்த்த ரோஹித் சர்மா – அப்படி என்ன சொன்னாருன்னு பாருங்க

“அவருடைய மெதுவான ஆட்டத்தால் இதர பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே ராகுல் அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். குறிப்பாக அவர் நேர்மையான அணுகு முறையுடன் சற்று அதிரடியாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement