
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்து 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல 3வது நாள் மாலையில் சரவெடியாக விளையாடிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 53 ரன்கள் எடுத்தார். குறிப்பாக பிரசித் கிருஷ்ணாவுடன் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு மட்டும் அவர் 39 ரன்கள் எடுக்காமல் போயிருந்தால் ஆட்டம் கடைசி நாள் வரை சென்றிருக்காது.
அதை விட சுந்தர் அடித்த 4 சிக்சர்களில் ஒரு சிக்சர் தான் கடைசியில் இந்தியாவின் சரித்திர வெற்றியின் வித்தியாசமாக அமைந்தது. இந்நிலையில் இத்தொடர் குறித்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் வீரர்களிடம் உடைமாற்றும் அறையில் பாராட்டி பேசியது பின்வருமாறு. “இத்தொடர் நடைபெற்ற விதத்திற்கு 2 – 2 என்ற முடிவு சிறப்பானது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”
“நீங்கள் தொடர்ந்து சிறப்பாக வேண்டும். நாம் தொடர்ந்து வேலை செய்து தொடர்ச்சியாக முன்னேறினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் டாமினேட் செய்ய முடியும். யார் வந்தாலும் சென்றாலும் நம்முடைய அணியின் கலாச்சாரம் இப்படியே இருக்க வேண்டும். நல்வாழ்த்துக்கள். அடுத்ததாக சில நாட்கள் ஓய்வுக்கு நீங்கள் தகுதியானவர்கள்” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து இத்தொடரின் சிறந்த இந்திய ஃபீல்டர் என்ற விருதை வாஷிங்டன் சுந்தர் வெல்வதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகளில் மற்ற இந்திய வீரர்களைக் காட்டிலும் சுந்தர் சிறப்பாக ஃபீல்டிங் செய்ததால் அந்த ஸ்பெஷல் விருதை வென்றார். அதை இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராக கருதப்படும் ரவீந்திர ஜடேஜா. “வாஷி, இங்கே வா குழந்தை” என்று பாசமாக சுந்தரை அழைத்து பரிசளித்தார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு மேட்சை அருகில் பாத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. அம்பயர் குமார் தர்மசேனா – பகிர்ந்த கருத்து
அதை ஏற்றுக்கொண்டு சுந்தர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து போன்ற நாட்டில் தொடர்ந்து 4 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததை ஆசிர்வாதமாக கருதுகிறேன். இங்கே சிறப்பாக விளையாட எப்போதும் விரும்பினேன். ஒரு அணியாக நாம் ஒவ்வொரு நாளும் களத்திற்கு சென்று எனர்ஜியை உருவாக்கினோம். குறிப்பாக ஃபீல்டிங் துறையில் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தோம். அனைத்திற்கும் நன்றி” என்று கூறினார்.