சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது நடைபெறும் சர்வதேச தொடர்களின் அடிப்படையில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்குப் பின்னர் ஐசிசி t20 கிரிக்கெட் வடிவத்திற்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியை 2 க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரை வெல்ல முக்கிய காரணமாக கோலி, தவான், ராகுல், பாண்டியா, ஜடேஜா, சாஹல் மற்றும் நடராஜன் ஆகிய அனைவரும் பங்களிப்பு கொடுத்தனர் என்று கூறலாம். ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக சிறப்பாக இந்திய அணி விளையாடியது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் முன்னேற்றமடைந்து டாப் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். இதில் கேஎல் ராகுல் 3வது இடத்தில் பிடித்துள்ளார். ஏற்கனவே நான்காம் இடத்தில் இருந்த ராகுல் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளார்.
அதேபோல கோலியும் ஒன்பதாம் இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரில் ராகுல் மூன்று போட்டிகளில் சேர்த்து 81 ரன்களை குவித்தார். கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 85 ரன்களை அதிரடியாக குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டி20 போட்டிகளின் பவுலருக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் வாஷிங்க்டன் சுந்தர் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார்.
இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். இந்த டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடிய அவர் முதல் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் 35 மற்றும் 34 ரன்களை கொடுத்திருந்தாலும் கடைசி ஆட்டத்தில் ஃபின்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் என ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருந்தார்.
Washington Sundar jumped 10 places to reach No.11 in the @MRFWorldwide ICC Men’s T20I Bowling Rankings after the series against Australia 💥 pic.twitter.com/iuhOTYxDSK
— ICC (@ICC) December 9, 2020
இந்நிலையில் 614 புள்ளிகளை பெற்று சர்வதேச டி20 போட்டிகளுக்கான பவுலிங் தரவரிசையில் முதல்முறையாக 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு ,முன்னர் 21 ஆவது இடத்தில் இருந்த சுந்தர் பத்து இடங்கள் நேரடியாக முன்னேறி இந்த 11 ஆவது இடத்தை அவர் பிடித்துள்ளார். இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.