வீடியோ : ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டிய வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் துல்லியம் – டெல்லி தடுமாற்ற ஸ்கோர்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடும் இந்த 2 அணிகளுமே வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இப்போட்டியில் களமிறங்கின. அதிலும் குறிப்பாக முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியல் கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த நிலைமையில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். குறிப்பாக ஹைதெராபாத்துக்கு 2016இல் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவரை அந்த அணி நிர்வாகம் நன்றி மறந்து கழற்றி விட்டாலும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் கொஞ்சமும் நன்றி மறவாமல் அவருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய வாஷிங்டன் சுந்தர்:
அந்த நிலைமையில் களமிறங்கிய மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாட முயற்சித்து 5 பவுண்டரியுடன் 25 (15) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்த போது தமிழக வீரர் நடராஜன் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அப்படி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்கள் விழுந்ததால் மீண்டும் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் நங்கூரத்தை போட முயன்ற போது வாஷிங்டன் சுந்தர் வீசிய 7வது ஓவரின் 2வது பந்தில் அதிரடியை துவக்க முயற்சித்து 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (20) ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதே ஓவரின் 4வது பந்தில் மறுபுறம் நின்ற சர்பராஸ் கானை 10 (9) ரன்களில் அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் கடைசி பந்தில் மற்றொரு இளம் வீரர் அமன் கானையும் அதிரடியாக விளையாடும் ஆசையை காட்டி கேட்ச் கொடுக்க வைத்து 4 (2) ரன்களில் காலி செய்தார். அந்த வகையில் வாசிங்டன் சுந்தர் சுழலில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 65/4 என தடுமாறிய போது நங்கூரத்தை போட்ட அக்சர் பட்டேல் – மனிஷ் பாண்டே ஆகியோர் நிதானமாக ரன்களை முயற்சித்தனர்.

- Advertisement -

8வது ஓவரில் இணைந்த இந்த ஜோடி மிடில் ஓவர்களில் விக்கெட்டை விடாமல் 18வது ஓவர் வரை நிலைத்து நின்று 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போது புவனேஸ்வர் குமார் வேதத்தில் அக்சர் பட்டேல் 4 பவுண்டரியுடன் 34 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவேரிலேயே மறுபுறம் 2 பவுண்டரிகளுடன் 34 (27) ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டேவை வாசிங்டன் சுந்தர் ரன் அவுட் செய்து அசத்தினார். அதனால் இறுதியில் அதிரடியை துவக்குவதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறிய டெல்லி 20 ஓவர்களில் கடுமையாக போராடி 144/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: CSK vs KKR : அஜின்க்யா ரஹானேவின் இந்த அதிரடிக்கு காரணம் இதுதான் – தோனி அளித்த பதில் இதோ

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய ஹைதராபாத் சார்பில் 4 ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்த புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் சுழலில் டெல்லியை வளைத்து மொத்த இன்னிங்ஸிலும் அதிரடி காட்டுவதை தடுத்த வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதே போல கடந்த போட்டியில் பங்கேற்காத இப்போட்டியில் நடராஜனும் 1 விக்கெட் எடுத்து கம்பேக் கொடுத்து அசத்தினார்.

Advertisement