இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்யாசத்தில் தோற்றது. அதனால் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இலங்கை 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்யாதது முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் தங்களுடைய சொந்த மண்ணில் இதை விட சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடி வெற்றி கண்டுள்ளதாக வாசிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தரம்:
எனவே சுழல் பந்துகளை எப்படி எதிர்கொண்டு 3வது போட்டியில் வெல்ல வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுழலுக்கு எதிராக நாங்கள் தரமான வீரர்கள். எங்கள் சொந்த மண்ணில் இது போன்ற பிட்ச்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இதர ஃபார்மெட்டிலும் நாங்கள் விளையாடியுள்ளோம். உள்ளூர் கிரிக்கெட்டிலும் கூட நாங்கள் இது போன்ற பிட்ச்களில் நிறைய விளையாடியுள்ளோம்”
“ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களுடைய வீரர்கள் குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டுள்ளனர். எனவே இத்தொடரில் வேலையை முடிக்க எங்களது வீரர்கள் தங்களது சொந்த வழியை மட்டும் கண்டறிய வேண்டும். இது சவாலான பிட்ச் என்பது எங்களுக்கு தெரியும். சவால்கள் உயரும் போது இந்திய அணியும் தங்களது கைகளை உயர்த்தியுள்ளது. அது போன்ற சூழ்நிலைகளில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் நாங்கள் அசத்தியுள்ளோம்”
“அதுவே கடந்த பல வருடங்களாக இந்திய அணியின் கூற்றாக இருக்கிறது. அதே போன்ற நிலைமை இந்த தொடரிலும் இருக்கிறது. எனவே அதில் அசத்துவதற்கு எங்கள் வீரர்கள் தங்களது வழியில் விளையாட வேண்டும். இன்றைய பயிற்சியில் கௌதம் கம்பீர் நேரடியாக வந்து வீரர்களிடம் சிறிய மாற்றங்களை செய்வதற்கான ஆலோசனைகளை கொடுத்தார்”
இதையும் படிங்க: எல்லா பழியும் உங்க மேல விழுந்துரும்.. 3வது போட்டியில் கம்பீர் அந்த தப்பை மட்டும் செய்யக்கூடாது.. பசித் அலி கருத்து
“எனவே 3வது போட்டியில் அனைத்து வகைகளிலும் அசத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இது போன்ற கடினமான சூழ்நிலைகள் தான் வரும் காலங்களில் ஐசிசி தொடரில் அசத்துவதற்கு தேவையான அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 3வது போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெறுகிறது. அதில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



