ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.
ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. ரஹானே இந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். இதில் இளம் வீரர்களான முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தங்கராசு நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி இருந்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்வதற்கு முன் அவரது உயரத்திற்கு சரியான கால் பேடுகள் (pad) கிடைக்காததால் மொத்த அணியும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாஷிங்டன் சுந்தர் மற்ற வீரர்களை விட சற்றே உயரமான பிளேயர் என்பதால் அவருக்கு பொருந்துவது போல் யாரிடமும் பேடுகள் இல்லை. அப்போது ஆஸ்திரேலிய வீரர்களிடமிருந்து பேடுகளை வாங்க திட்டமிட்டனர். ஆனால் கொரானா வைரஸ் காரணமாக அதுவும் முடியவில்லை. இதனால் இறுதி டெஸ்ட் போட்டி நடக்கும் அதே நாளில் வாசிங்டன் சுந்தருக்காக கடைக்குச் சென்று பேடுகளை வாங்கியுள்ளனர்.
போட்டி துவங்கும் நாளின் கடைசி நிமிடம் வரை வாசிங்டன் சுந்தர் பேடுகள் இல்லாமல் தவித்தது வந்தார் எனவும், இறுதியாக கடைசி நேரத்தில் இந்திய அணியின் நிர்வாகிகள் அலைந்து திரிந்து வாங்கியதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.