வீடியோ : தெறிக்கவிடும் பினிஷிங் செய்த வாஷிங்டன் சுந்தர் – ரெய்னா, சேவாக், யுவியை முந்தி படைத்த வரலாற்று சாதனை இதோ

Washington Sundar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த பின் நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இச்சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 தொடரில் அசத்திய இந்தியா அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. நவம்பர் 25ஆம் தேதியன்று ஆக்லாந்து நகரில் இருக்கும் ஈடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சமீபத்திய ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்க தொடர்களில் அற்புதமான தொடக்கத்தை கொடுத்த கேப்டன் தவான் – சுப்மன் கில் ஆகிய ஓப்பனிங் ஜோடி இப்போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் சிறப்பான தொடக்கம் கொடுத்தது. பவர் பிளே ஓவர்களில் அதிரடியை காட்டிய இந்த ஜோடி 23.1 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக நின்று நியூசிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவை வலுப்படுத்திய போது சுப்மன் கில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (65) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மாஸ் பினிஷிங்:

அடுத்த சில ஓவர்களில் பொறுப்பாக செயல்பட்ட கேப்டன் ஷிகர் தவான் 13 பவுண்டரியுடன் அரை சதமடித்து 72 (77) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ரிசப் பண்ட் வழக்கம் போல பொறுப்பின்றி 15 (23) ரன்களில் நடையை கட்டிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் 4 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் திடீரென 160/4 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் – சஞ்சு சாம்சன் ஆகியோர் மிடில் ஓவர்களில் நங்கூரமாக நின்று 5வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்கள்.

அப்படி நன்கு செட்டிலான சஞ்சு சாம்சன் 4 பவுண்டரியுடன் 36 (38) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்து சென்றார். ஆனால் அப்போது களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் யாருமே எதிர்பாராத வகையில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37* (16) ரன்களை விளாசி மாஸ் பினிஷிங் கொடுத்ததால் கடைசி ஓவரில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் அவுட்டான ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்த 80 (76) ரன்களையும் சேர்த்து இந்தியா 306/5 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து 307 ரன்களை நியூசிலாந்து துரத்தி வரும் நிலையில் கடைசி நேரத்தில் 37* ரன்களை அடித்து நொறுக்கிய வாஷிங்டன் சுந்தர் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார். குறிப்பாக இந்த இன்னிங்ஸ் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டினார். அந்தளவுக்கு டிம் சவுதி போன்ற தரமான பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட வாஷிங்டன் சுந்தர் மாட் ஹென்றி வீசிய 48வது ஓவரில் 4, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்டு கடைசி நேரத்தில் அவுட்டான சஞ்சு சாம்சன் செய்ய வேண்டிய வேலையை கச்சிதமாக செய்தார்.

அந்த வகையில் 37* ரன்களை 231.25 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் குறைந்தபட்சம் 25 ரன்களை அடித்த இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை சேவாக், ரெய்னா போன்ற ஜாம்பவான்களை முந்தி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. வாஷிங்டன் சுந்தர் : 231.25, நியூசிலாந்துக்கு எதிராக, 2022*
2. வினய் குமார் : 225.00, ஜிம்பாப்பேவுக்கு எதிராக, 2013
3. வீரேந்திர சேவாக் : 218.18, இலங்கைக்கு எதிராக, 2005
4. யுவராஜ் சிங் : 215.62, வங்கதேசத்துக்கு எதிராக, 2004
5. சுரேஷ் ரெய்னா : 211.11, நியூசிலாந்துக்கு எதிராக, 2009

உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடும் வாஷிங்டன் சுந்தர் சமீப காலங்களாகவே காயத்தால் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றும் விளையாட முடியாமல் தவித்தார். ஆனால் தற்போது நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்று சாதனை இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் இதே போல் செயல்பட்டு உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement