ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை வென்றது. டி20 தொடரை இந்திய அணி வெல்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தங்கராஜ் நடராஜனின் பந்துவீச்சு தான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இந்த தொடரின் 3 போட்டிகளிலும் இடம்பெற்றிருந்த நடராஜன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமின்றி பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் இல்லாத நேரத்தில் நடராஜன் சிறப்பாக செயல்பட்டார்.
இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. ஹர்திக் பாண்டியாவிற்கு டி20 தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஹர்திக் பாண்டியாவின் பெருந்தன்மையால் தனக்கு வழங்கப்பட்ட இந்த விருதுக்கு சொந்தக்காரர் நடராஜன் தான் என்று கூறி கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து சிறப்பித்தார். மேலும் நடராஜனின் எளிமையான குணம் தன்னை கவர்ந்ததாகவும் பாண்டியா கூறினார்.
ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 16 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக பந்து வீசியதால் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நடராஜன். தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரரான வருண் சக்கரவர்த்திக்கு காயமடைய அவருக்கு பதிலாக மாற்று பந்துவீச்சாளராக நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் சைனி காயமடைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்க தனது முதல் போட்டியிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதன்மூலம் டி20 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தது. தனது முழு திறமையை வெளிப்படுத்தினார் நடராஜன். இதன்மூலம் 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் நடராஜனை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் நடராஜனின் ஐபிஎல் கேப்டனான டேவிட் வார்னர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “நாங்கள் டி20 தொடரை இழந்தாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷம் அடையாமல் இருக்க முடியாது. மிகவும் இனிமையானவர், ஆட்டத்தை முழுவதும் நேசிக்கக் கூடியவர். வலைப்பயிற்சிக்காக வந்த ஒரு இந்திய வீரர், சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இவ்வளவு சிறப்பாக விளையாடியது மிகப்பெரிய சாதனை” என்று நடராஜனை வாழ்த்தியுள்ளார் டேவிட் வார்னர்.