140 கி.மீ வேகத்தில் வீசுவதை பார்க்கணும், உங்க பிரச்சனையும் அதுதான் – இந்திய பவுலருக்கு பிரட் லீ கோரிக்கை

Lee
Advertisement

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் எதிரணிகளை காட்டிலும் வலுவாக இருப்பதாலும் எளிதாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றில் செய்த தேவையற்ற மாற்றங்கள், சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்களால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் இங்கேயே கோப்பையை தக்க வைக்க முடியாத இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை எங்கே வெல்லப் போகிறது என்ற கவலை இந்தியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Bhuvaneswar Kumar

இந்த தோல்விக்கு தீபக் சஹர் போன்ற 4வது வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்யாதது, பினிஷெராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ் கார்த்திக்கை சரியாக பயன்படுத்தாதது சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல் கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டமும் தோல்வியை பரிசளித்தது. அதிலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் விலகியுள்ளார்கள் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் சூப்பர் 4 சுற்றில் படுமோசமாக செயல்பட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

- Advertisement -

வேகம் பத்தல:
பொதுவாகவே புதிய பந்தை ஸ்விங் செய்து பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுக்கும் பவுலராக கருதப்படும் புவனேஸ்வர் குமார் இந்த தொடரிலும் அதை கச்சிதமாக செய்தார். ஆனால் அழுத்தமான கடைசி கட்ட ஓவர்களில் குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக 19வது ஓவரில் முறையே 25, 21 ரன்கள் எதிரணிக்கு தேவைப்பட்டபோது பொறுப்பை காட்டாத அவர் முறையே 19, 14 ரன்களை வாரி வழங்கி வெற்றியையும் கோட்டை விட்டார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் தன்னுடைய பலமான புதிய பந்தை ஸ்விங் செய்து பவர்பிளே ஓவர்களில் அற்புதமாக செயல்பட்ட அவர் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

Bhuvneshwar-Kumar-1

இதிலிருந்து புவனேஸ்வர் குமார் என்றால் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் கடைசி கட்ட ஓவர்களில் அடி வாங்குபவர் என்பது தெளிவாகியுள்ளது. இப்படிப்பட்ட இவர் விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பும்ராவுடன் முதன்மை பவுலராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வர் குமாரிடம் இருந்து 140 கி.மீ வேகப்பந்துகளை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிரட் லீ அதை செய்தாலே அவருடைய பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் புவனேஸ்வர் குமாரிடம் இருந்து அதிகமாக (வேகம்) எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அவர் எந்தளவுக்கு நல்ல பவுலர் என்பது எனக்கு தெரியும். அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். எனவே அவர் வழக்கம்போல பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். அதே சமயம் 140 கி.மீ வேகத்தில் பந்து வீச அவர் முயற்சிக்க வேண்டும். அதை மட்டும் செய்தால் இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியை தலைமை ஏற்று அவரால் நடத்த முடியும். அவர் அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். மேலும் விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் அவர் தலைமையேற்று நடத்தினால் அவரை சுற்றி இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி உருவாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.

Lee

அவர் கூறுவது போல பந்தை ஸ்விங் செய்யும் திறமை பெற்றுள்ள புவனேஸ்வர் குமாரிடம் 120 – 130+ கி.மீ பந்து வீசுவது மட்டுமே குறையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடைசி கட்ட ஓவர்களில் பந்து ஸ்விங் ஆகாது என்ற நிலைமையில் குறைவான வேகத்தில் வீசும் அவருடைய பந்துகளை எதிரணி பேட்ஸ்மென்கள் பயப்படாமல் சரமாரியாக அடிக்கிறார்கள். எனவே பிரட் லீ கூறுவது போல தற்போது வைத்துள்ள ஸ்விங் திறமைகளையும் சேர்த்து 140 கி.மீ வேகத்தில் பந்து வீசினால் ஜஸ்பிரித் பும்ராவை விட புவனேஸ்வர் குமார் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுப்பவராக செயல்படுவார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement