இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. எனவே அடுத்ததாக நடைபெறும் உள்ளூர் தொடர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேப்டன் ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இளம் இந்திய வீரர் சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் பிளேயராக பார்ப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனாலேயே அவரை இந்தியாவின் வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காக தற்போது துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அகர்கர் கூறியிருந்தார். அதற்கு இந்திய அணியில் வேறு ஆல் ஃ.பார்மட் பிளேயர்களே இல்லையா? என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சூரியகுமார் அறிவிப்பு:
ஏனெனில் 2023 உலகக் கோப்பையிலிருந்தே தடுமாற்றமாக விளையாடி வரும் சுப்மன் கில் சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் கேப்டனாக சுயநலத்துடன் நடந்து கொண்டார். அத்துடன் நடைபெற்று முடிந்த இலங்கை ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இப்படிப்பட்ட நிலையில் தாமும் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புவதாக சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அதற்காக ரோஹித் சர்மா சொன்னது போல் விரைவில் மும்பையில் துவங்கும் புஜ்ஜி பாபு உள்ளூர் தொடரில் விளையாட உள்ளதாகவும் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக நான் அனைத்து விதமான ஃபார்மெட்டிலும் விளையாட விரும்புகிறேன். புஜ்ஜி பாபு தொடரில் விளையாடுவது இந்த சீசனில் அடுத்ததாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடர்களுக்கு தயாராக எனக்கு நல்ல பயிற்சியாக அமையும்” என்று கூறினார்.
அவருடைய விருப்பத்தை மும்பை அணியின் தலைமை தேர்வுக் குழு தலைவர் சஞ்சய் பாட்டில் ஏற்றுக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 27 – 30 தேதிகளில் நடைபெற உள்ள தமிழ்நாடு லெவன் அணிக்கு எதிராக நடைபெறும் புஜ்ஜி பாபு லீக் போட்டியில் சூரியகுமார் மும்பை அணிக்காக களமிறங்க உள்ளார். அவருடைய இந்த முடிவை சுப்மன் கில்லுக்கு போட்டியாகவே இந்திய ரசிகர்கள் பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: இதை விட கொடுமையான ரூல் இருக்க முடியாது.. அதை கொண்டு வராத்தீங்க.. பிசிசிஐக்கு அஸ்வின் கோரிக்கை
ஏனெனில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவை பின்னுக்குத் தள்ளிய அவர் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சூரியகுமாருக்கு அறிமுகப் போட்டிக்கு பின் இன்னும் மறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் தற்போது உள்ளூர் தொடரில் அசத்தும் பட்சத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் சூரியகுமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடப்பட்டது.



