அவர் ஒருத்தர் இல்லாமல் பயிற்சி போட்டியிலேயே ஆட்டம் கண்டு சாய்ந்த இந்தியா – நடந்தது இதோ

KL Rahul Suryakumar Yadav IND vs RSA
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விரைவில் துவங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு ஒரு வாரம் முன்னதாகவே அங்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் அக்டோபர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் போராடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா அக்டோபர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் களமிறங்கியது. பெர்த் நகரில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற வாக்கா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஓய்வெடுத்த நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் ஜோஸ் ஃபிலிப் 8 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிக் ஹோப்சன் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 64 (41) ரன்களில் அவுட்டாக அவருடன் அசத்திய மற்றொரு தொடக்க வீரர் டார்சி ஷார்ட் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (38) ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 168/8 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சொதப்பிய பேட்டிங்:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு முக்கிய வீரர்கள் இல்லாததால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கி 9 (11) ரன்களில் நடையை கட்டினார். அந்த நிலையில் அடுத்து வந்த தீபக் ஹூடா 6 (9) ஹர்டிக் பாண்டியா 17 (9) அக்சர் படேல் 2 (7) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற தினேஷ் கார்த்திக்கும் 10 (14) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

இருப்பினும் மறுபுறம் பொறுப்புடன் நங்கூரமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் 19வது ஓவர் வரை நிதானமாக செயல்பட்டாலும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 74 (55) ரன்களை 134.54 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றிக்காக போராடி ஆட்டமிழந்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 132/8 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஒருத்தர் இல்ல:
இதனால் முதல் போட்டியில் தங்களை தோற்கடித்து தலைகுனிய வைத்த இந்தியாவை 2வது போட்டியில் வென்ற மேற்கு ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் பதிலடி கொடுத்தது. முன்னதாக பந்து வீச்சாளர்கள் 180 – 200 ரன்களை தொட விடாமல் தங்களது வேலையை ஓரளவு சிறப்பாக செய்தனர். ஆனால் பயிற்சி எடுப்பதற்காக நடைபெற்ற இப்போட்டியில் வேண்டுமென்றே விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஓய்வெடுத்த நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய பேட்டிங் துறையில் ராகுலை தவிர்த்து வேறு யாருமே 20 ரன்களை கூட எடுக்காதது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

அதிலும் குறிப்பாக ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோரைத் தவிர்த்து எஞ்சிய பேட்ஸ்மேன்கள் 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியிலும் இதே போல பெரும்பாலான பேட்ஸ்மென்கள் ரன்கள் குவிக்க தடுமாறிய நிலையில் தற்போது அட்டகாசமான பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 52 ரன்கள் குவித்து காப்பாற்றி வெற்றி பெற வைத்தார்.

ஆனால் அவரில்லாத இப்போட்டியில் இந்திய பேட்டிங் ஆட்டம் கண்டுள்ளது ரசிகர்களுக்கு மேலும் கவலையை கொடுத்துள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா ஏற்கனவே தடுமாற்றமான பார்மில் இருக்கும் நிலையில் கேஎல் ராகுல் பெரிய இன்னிங்ஸ் விளையாடினாலும் இதே போல் எப்போதும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இப்படி தோல்விக்கு காரணமாக அமைவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதே போல் பாண்டியா, கார்த்திக் ஆகியோர் பினிஷிங் மட்டும் செய்யலாம் என்று நினைக்காமல் இதுபோல் முன்கூட்டியே களமிறங்க வேண்டிய சூழ்நிலைகளில் பொறுப்புடன் செயல்பட வேண்டியதை இந்த பயிற்சி போட்டிகள் உணர்த்தியுள்ளது. மொத்தத்தில் தற்சமயத்தில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவை மட்டுமே இந்தியா நம்பி இருக்கும் நிலையில் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி ஆஸ்திரேலியாவில் எந்தளவுக்கு சிறப்பாக செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement