இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 38 வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2022 வரையிலான காலகட்டங்களில் 34 டெஸ்ட், 167 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 24 சதங்களுடன் 10,867 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்து தொடர்நாயகன் மற்றும் தங்க பேட் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அப்படியே 2015 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்றார். அதனால் சாம்பியன் டிராபியில் 2 தங்க பேட் விருது வென்ற ஒரே வீரராகவும் தவான் உலக சாதனை படைத்தார். அதன் பின் 2018 ஆசிய கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
தோனியின் மாஸ்டர் முடிவு:
மேலும் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்தை பொறுப்பெடுத்தாமல் சதமடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் அந்த காயத்துக்கு பின் தடுமாற்றமாக விளையாடிய அவரை பிசிசிஐ கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டது. எனவே ஜெயஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்கள் வந்து விட்டதால் தவான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் போட்டியிலே டக் அவுட்டான தவான் 2012 வரை மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது வருங்காலத்தை வளமாக்குவதற்காக தடுமாற்றமாக விளையாடிய ஜாம்பவான் வீரேந்திர சேவாக்கை அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தைரியமாக கழற்றி விட்டார். அதற்கு பதிலாக தவானை 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோகித் சர்மாவுடன் தோனி ஓப்பனிங் களமிறக்கினார்.
வீணாகாத இடம்:
அதில் தவான் தங்க பேட் விருது வென்றார். மறுபுறம் அதே வருடத்தில் சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 இன்னிங்ஸில் 50 ரன்கள் கூட தாண்டவில்லை. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சேவாக்கை கழற்றி விட்ட தோனி 2013 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மொஹாலி போட்டியில் தவானை ஓப்பனிங்கில் களமிறக்கினார். அந்த வாய்ப்பில் 85 பந்துகளில் சதம் அடித்த தவான் அறிமுகப் போட்டியில் அதிவேகமாக சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: ரெய்னா, லக்ஷ்மன், கம்பீர் முதல் பாண்டியா வரை.. ஐசிசி தொடர்களின் நாயகன் தவானுக்கு தெரிவித்த வாழ்த்து
அதன் காரணமாக இந்திய அணியில் மேற்கொண்டு வாய்ப்பு பெறாத சேவாக்கின் சகாப்தம் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் தம்முடைய இடத்தில் வாய்ப்பு பெற்ற தவான் அதை வீணடிக்க வில்லை என சேவாக் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “மொஹாலியில் எனக்கு பதிலாக நீங்கள் விளையாடத் துவங்கியது முதல் திரும்பிப் பார்க்கவில்லை. கடந்த பல வருடங்களில் நிறைய டாப் செயல்பாடுகள் வெளிவந்தன. நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவும் வாழ்க்கையை வாழவும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.



