இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரிலிருந்து அவரது தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட புதிய இந்திய அணி களமிறங்க உள்ளது. முன்னதாக ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் இந்தியாவின் புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபிட்னஸ் பிரச்சனையால் அவருக்கு பதில் பிசிசிஐ கில்லை கேப்டனாக நியமித்துள்ளது.
இருப்பினும் வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்திராத அவர் முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்திருந்தார். தற்போது அதே கேள்வியை மற்றொரு முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேட்டுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவுக்கு பின் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்க 2வது சிறந்த ஆப்ஷன்”
திவாரி விமர்சனம்:
“முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கு பொருத்தமற்ற ஒருவர் எப்படி கேப்டனாக முடியும்? அதையும் தாண்டி 2வது சிறந்த ஆப்சனாக யார் என்று தேர்வுக் குழுவினர் பார்த்துள்ளனர். அது கில்லாக இருந்ததால் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய வீரேந்திர சேவாக் ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு பின் ரிஷப் பண்ட் மட்டுமே டெஸ்ட் கேப்டனாகும் தகுதியைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரை விட்டுவிட்டு கில்லை கேப்டனாக தேர்ந்தெடுத்த பிசிசிஐ மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு தொடருக்கு பும்ரா பரவாயில்லை. ஆனால் ஒருவர் நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் பும்ராவை தேர்ந்தெடுக்காதது சரியான முடிவு என்று சொல்வேன்”
சேவாக் அதிருப்தி:
“ஏனெனில் வருடத்தில் இந்தியா 10 போட்டிகளில் விளையாடினால் அந்த அனைத்திலும் விளையாட முடியாது. ஆனால் திவாரி சொன்னது போல கில் 2வது சிறந்த ஆப்ஷன் கிடையாது. 3வது ஆப்சன். உண்மையில் ரிஷப் பண்ட் தான் 2வது ஆப்சன். ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு செய்ததை தற்போதுள்ள வீரர்களில் யாரும் செய்யவில்லை”
இதையும் படிங்க: சிஎஸ்கே நலனுக்காக விராட் கோலி மாதிரி.. தோனி இதை செஞ்சு ஆகனும்.. முரளி கார்த்திக் பேட்டி
“விராட் கோலிக்கு பின் ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைத்த ஒரு வீரர் என்றால் அது பண்ட். விபத்து காரணமாக காயத்தைச் சந்தித்த அவர் மீண்டும் விளையாட வந்த போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனாலேயே துணைக் கேப்டனாக நியமித்தால் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என்ற சிந்தனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரை வருங்காலத்தில் கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. ஆனால் பும்ரா போன்ற பவுலர்கள் கேப்டனாக நியமிக்கப்படுவது அரிதானது. எனது கேரியரில் பிளேயிங் லெவனில் மிகவும் முக்கியமான அனில் கும்ப்ளே மட்டுமே கேப்டனாக இருந்து பார்த்துள்ளேன்” என்று கூறினார்.



