இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் மிகவும் சர்ச்சையான பயிற்சியாளராக பார்க்கப்படுகிறார். அவருடைய ஆஸ்திரேலிய கலாச்சாரம் நிறைந்த பயிற்சி இந்திய அணியில் பெரிய சலசலப்பையும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சௌரவ் கங்குலி தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை இழக்க நேரிட்டார். அதே போல 2007 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் பெரிய ரன்கள் அடிக்காவிட்டால் அணியிலிருந்து நீக்குவேன் என்று கிரேக் சேப்பல் மிரட்டியதாக விரேந்திர சேவாக் கூறியுள்ளார். அப்போது தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையை கேப்டன் ராகுல் டிராவிட் தடுத்து நிறுத்தியதாகவும் சேவாக் கூறியுள்ளார். கடைசியில் அப்போட்டியில் 184 ரன்கள் அடித்து சேப்பலுக்கு பதிலடி கொடுத்ததாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
மிரட்டிய சேப்பல்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரேக் சேப்பல் வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தின. ஒரு சமயம் நான் ரன்கள் அடிக்காமல் இருந்தேன். அப்போது உன்னுடைய கால்களை சரியாக நகர்த்தாவிட்டால் சர்வதேச அளவில் ரன்கள் அடிக்க முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கு “கிரேக், ஏற்கனவே நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் மேற்பட்ட சராசரியில் 6000 ரன்கள் அடித்துள்ளேன்” என்று அவருக்கு பதிலளித்தேன்”
“அதற்கு அதெல்லாம் முக்கியமில்லை, இப்போது உங்களுடைய கால்கள் நகராவிட்டால் ரன்கள் அடிக்க முடியாது என்று அவர் சொன்னார். அதனால் எங்களிடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கேப்டன் ராகுல் டிராவிட் வந்து எங்களைப் பிரித்தார். அடுத்த நாள் நான் பேட்டிங் செய்ய சென்ற போது “இன்று பெரிய ரன்கள் அடிக்காவிட்டால், உன்னை நீக்குவேன்” என்று சேப்பல் சொன்னார்”
சேவாக்கின் பதிலடி:
“ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு செல்லும் போது அது போன்ற வார்த்தைகளைக் கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த சூழ்நிலையில் களமிறங்கிய நான் அதிரடியாக விளையாடி உணவு இடைவேளைக்கு முன் 99 ரன்கள் எடுத்தேன். அங்கே நின்று கொண்டிருந்த டிராவிட்டிடம் நமது பயிற்சியாளரை என் பக்கத்தில் வர வேண்டாமென சொல்லுங்கள் என்று சொன்னேன்”
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் என்ன சாதிக்க போறீங்க.. ரசிகர்கள் மாதிரி நான் அதை செய்ய மாட்டேன்.. திவாரி விமர்சனம்
“அதைத் தொடர்ந்து சாப்பிட்டு களமிறங்கிய நான் தேனீர் இடைவெளிக்கு முன் 184 ரன்கள் அடித்து அவுட்டானேன். அப்போது மூலையில் நின்று கொண்டிருந்த சேப்பலை பார்த்து “என்னுடைய காலை நகர்த்துகிறேனா இல்லையா என்பதைத் தாண்டி எனக்கு எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பது தெரியும் என்று சொன்னேன்” எனக் கூறினார்.



