
இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அழுத்தமான ஃபைனலில் சுமாராக செயல்பட்டு 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்மேன்கள் சொதப்பிய நிலையில் அதிகபட்சமாக ரஹானே 89, சார்துல் தாக்கூர் 51, ரவீந்திர ஜடேஜா 48 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து பாலோ ஆனை தவிர்த்து காப்பாற்றினர்.
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்தி 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் மீண்டும் சிறப்பான பேட்டி கை வெளிப்படுத்தி 270/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 444 ரன்கள் என்ற உலக சாதனை வெற்றி இலக்கை நிர்ணயித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
இது அவுட்டா:
அதை தொடர்ந்து மெகா இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா சற்று அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் 2 பவுண்டரிகளை பறக்க விட்ட இளம் வீரர் சுப்மன் கில் 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தார். இருப்பினும் ஸ்காட் போலண்ட் வீசிய 8வது ஓவரின் முதல் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகி வந்த பந்தில் எட்ஜ் வாங்கிய அவர் கொடுத்த கேட்ச்சை ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த கேமரூன் கிரீன் பிடித்தார்.
ஆனாலும் தரையோடு தரையாக பிடித்ததால் களத்தில் இருந்த நடுவர்கள் சந்தேகப்பட்டு 3வது நடுவரின் உதவியை நாடினர். அதைத்தொடர்ந்து சோதிக்கப்பட்ட போது கேமரூன் கிரீன் பந்தை காற்றில் தொட்டு முழுமையாக பிடிக்கும் போது பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. அதனால் நன்றாக திரையை பெரிதாக்கி சோதித்த போது பந்துக்கு அடியில் அவருடைய 2 கை விரல்களும் இருந்தது நன்றாக தெரிய வந்தது. ஆனால் அதே சமயம் பந்து அவருடைய 2 விரல்களுக்கு நடுவே தரையில் உரசியது பார்த்த அனைவருக்குமே தெரிந்ததால் நிச்சயம் அவுட் வழங்கப்படாது என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
இருப்பினும் பந்துகளுக்கு கீழே விரல்கள் இருந்ததால் 3வது நடுவர் அவுட் என்று அறிவித்தது கேப்டன் ரோஹித் சர்மாவையும் கில்லையும் அதிருப்தி ஆழ்த்தியது. குறிப்பாக விரல்களுக்கு நடுவே பந்து தரையை தொட்டது தெளிவாக தெரிந்தும் ஏன் அவுட் கொடுத்தீர்கள் என்று களத்தில் இருந்த நடுவரிடம் ரோகித் சர்மா வாதிட்டும் முடிவை மாற்ற முடியாது என்று தெரிவித்ததால் கில் 18 (19) ரன்களில் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
அதே போல ஓவல் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களும் சீட்டர் சீட்டர் என்று முழங்கி ஆஸ்திரேலியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுவாக இது போன்ற சமயங்களில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கொடுப்பதே விதிமுறையாகும். அதை ட்விட்டரில் சுட்டிக் காட்டியுள்ள முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவுட் கொடுக்க கூடாது என்று கண்ணை கட்டிக்கொண்டு தவறான தீர்ப்பை வழங்கிய நடுவரை விமர்சித்துள்ளார்.
அத்துடன் வாஷிம் ஜாபர் போன்ற சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் நடுவரை வெளுத்து வாங்குகின்றனர். ஏனெனில் ஃபைனலில் இது போன்ற சிறிய தவறான தீர்ப்பு கூட இந்தியாவின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் 2014 முதல் 2019 உலகக்கோப்பை வரை நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தோல்வியை சந்தித்த போது இருந்த அதே ராசியில்லாத அம்பயர் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோக் தான் இந்த தீர்ப்பை வழங்கி மீண்டும் இந்திய அணிக்கு எதிராக நேரடியாக செயல்பட்டுள்ளது ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது. அதை தொடர்ந்து இந்தியா 90/1 ரன்களுடன் போராடி வருகிறது.