
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்த அவரிடம் நிறைய அனுபவம் இருக்கிறது. அப்படிப்பட்ட அவர் இந்திய அணிக்காக சுமாராக விளையாடும் வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளிப்படையாக விமர்சிக்க தயங்க மாட்டார்.
குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ரிசப் பண்ட் மோசமாக விளையாடி அவுட்டான போது ஸ்டுப்பிட் என்று கவாஸ்கர் விமர்சித்ததை மறக்க முடியாது. அதே சமயம் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அனைவரையுமே கவாஸ்கர் பாராட்டாமல் இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக கடந்த இங்கிலாந்து தொடரில் தம்முடைய சாதனையை உடைத்த சுப்மன் கில்லை நேரில் சந்தித்த கவாஸ்கர் தனது கையொப்பமிட்ட தொப்பி மற்றும் சட்டையை பரிசாகக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட கவாஸ்கர் கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு மற்றொரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் பெயரைக் குறிப்பிடாமல் விராட் கோலி பதிலடி கொடுத்தார். அதே போல கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாடவில்லை.
அப்போது கேப்டன் ரோஹித் இந்திய அணியுடன் இருந்திருக்க வேண்டும் என்று கவாஸ்கர் விமர்சித்தார். அது பற்றி பிசிசிஐ’யிடம் ரோஹித் சர்மா புகார் செய்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நன்மைக்காக கவாஸ்கர் தெரிவிக்கும் விமர்சனங்களை விராட், ரோஹித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அவமதிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கர்சன் கவ்ரி தெரிவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கருடன் இந்திய அணியில் இணைந்து விளையாடிய சக வீரரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது முட்டாள்தனமானது. நீங்கள் விராட் அல்லது ரோஹித் சர்மாவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கவாஸ்கர் எனும் சிறந்த மனிதரை மதிக்க வேண்டும். அவர் ஏதேனும் தெரிவித்தால் அது உங்களுடைய நல்லதுக்காகவே இருக்கும்”
இதையும் படிங்க: புவனேஷ்வர் குமாரை யாரும் கவனிக்குறது இல்ல.. அவருக்கு அந்த வாய்ப்பை கொடுங்க – சீக்கா ஆதரவு
“ரவி சாஸ்திரி பாராட்டுவதில் திறந்த இதயத்தைக் கொண்டவர். ஆனால் விமர்சனம் என்று வரும் போது சுனில் கவாஸ்கர் முற்றிலும் வித்தியாசமாக செய்வார். சாஸ்திரியை விட அவர் வெளிப்படையாக விமர்சிப்பார். 25 வருடங்கள் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் இளம் வீரர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளக்கூடியவர். நம்முடைய வீரர்கள் அவரிடம் ஆலோசனைகளைக் கேட்க செல்வதில்லை என்பது துரதிஷ்டவசமானதாகும். ஒவ்வொரு இந்திய வீரரும் அவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஆனால் விராட், ரோஹித் அல்லது கில் ஆகியோருக்கு கவாஸ்கர் ஊடகங்களில் ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார்” என்று கூறினார்.