இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சமீப காலமாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்த அவர் அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் மோசமான சரிவை சந்தித்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பெரிய மனதை காட்டிய விராட் கோலி :
இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவரது பேட்டிங் ஃபார்ம் சரிவிலிருந்து மீள உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டதின் பெயரில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டெல்லி அணிக்காக விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரராக பார்க்கப்படும் விராட் கோலி தனக்காக எந்த ஒரு சொகுசு வசதிகளையும் பிரத்யேகமாக செய்துகொடுக்க தேவையில்லை என டெல்லி மாநில கிரிக்கெட் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் மற்ற சக டெல்லிஅணி வீரர்களுக்கு என்ன உணவு கிடைக்கிறதோ, என்ன சம்பளம் கிடைக்கிறதோ அதையே தானும் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விராட் கோலி ஒரு நட்சத்திர வீரர் என்பதனால் அவருக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவு ஏற்பாடும், தங்கும் வசதியும் செய்து தர இருப்பதாக டெல்லி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் விராட் கோலி அணியின் நிர்வாகத்திடம் தானும் மற்ற வீரர்களுடன் இணைந்து இருக்கிறேன் என்றும் அவர்கள் சாப்பிடும் இடத்திலேயே சாப்பிடுகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : விராட், ரோஹித் விட்ட இடத்தை பக்குவமாக நிரப்பி வரும் சூரியகுமார் யாதவ் – தொடரும் அசத்தல்
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக இருந்தும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தும் அவர் இப்படி இயல்பாக நடந்து கொண்டு மற்றவர்களிடம் விராட் கோலி பழகுவது அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



