ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. மார்ச் 4ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 265 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73, அலெக்ஸ் கேரி 61 ரன்கள் எடுத்தார்கள்.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷமி 3, ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 28, கில் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக 84 ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 45, அக்சர் பட்டேல் 27, கேஎல் ராகுல் 42*, ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்தனர்.
ஆட்டநாயகன் கிங் கோலி:
அதனால் 48.1 ஓவரில் 267-6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு ஆஸ்திரேலியாவை இத்தொடரிலிருந்து நாட் அவுட் செய்து வெளியேற்றி பழி தீர்த்தது. அதனால் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதி பெற்று அசத்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்றதை போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்றதில் மகிழ்ச்சி என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் சவாலான துபாய் பிட்ச்சில் அதிரடியை விட சிங்கிள் எடுத்து பார்ட்னர்ஷிப் அமைப்பதே வெற்றிக்கான சிறந்த வழி என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பாகிஸ்தான் போல மகிழ்ச்சி:
“இது பாகிஸ்தானுக்கு எதிராக மற்றொரு நாள் விளையாடியதைப் போல இருந்தது. என்னைப் பொறுத்த வரை அடிப்படைகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் எனது ஆட்டத்தை தயார்படுத்துவதை பற்றியதாகும். ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். ஏனெனில் இந்த பிட்ச்சில் பார்ட்னர்ஷிப் அமைப்பது மிகவும் முக்கியம். பாகிஸ்தானுக்கு எதிராகவும் இன்றும் பார்ட்னர்ஷிப் அமைப்பதே என்னுடைய ஒரே வேலையாக இருந்தது”
“20+ ரன்கள் தேவைப்பட்ட போது அதை சில ஓவர்களில் ஃபினிஷிங் செய்யலாம் என்ற திட்டத்தைப் பின்பற்றி அவுட்டானேன். பொதுவாக அந்த டெம்ப்ளேட்டை தான் நான் பின்பற்றுவேன். ஆனால் சில நேரங்களில் உங்களால் அதைச் செயல்படுத்த முடியாது. என்னுடைய ஆட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் எனது டைமிங் மற்றும் களத்தில் காட்டும் பொறுமையாகும்”
இதையும் படிங்க: 265 ரன்ஸ்.. கிங் கோலி அசத்தலில் 14 வருட சாதனை சேசிங்.. ஆஸியை வீட்டுக்கு அனுப்பி 2023 தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா
“நான் எதையும் தீவிரமாக முயற்சிக்கவில்லை. இடைவெளிகளில் ஆங்காங்கே சிங்கிள் எடுத்து விளையாடுவதில் மகிழ்ச்சி. அப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாடும் போது தான் பேட்ஸ்மேனாக நீங்கள் பெருமையடைவீர்கள். அவ்வாறு விளையாடுகையில் பெரிய பார்ட்னர்ஷிப் வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அதை பாகிஸ்தானுக்கு எதிராகவும் இன்றும் அதை செய்ததே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்த விஷயம்” என்று கூறினார்.



