இக்கட்டான சூழலில் இவர்கள் இருவரும் அமைத்த பாட்னர்ஷிப் ரொம்ப முக்கியமானது – வெற்றிக்கு பிறகு கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவிக்க அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 365 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில் : சென்னை டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு நாங்கள் மீண்டும் வந்தது சிறப்பாக உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். இந்த தொடரில் டாஸ் நிச்சயம் ஒரு முக்கிய பங்கினை வகித்தது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றில் எங்களது உழைப்பை காட்டியுள்ளோம்.

பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் அணியில் விளையாடாமல் பென்ச்சில் இருக்கும் வீரர்களின் வலிமை மிக பலமாக உள்ளது, இது இந்திய அணிக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். எப்பொழுது வீரர்களில் மாற்றம் ஏற்பட்டாலும் அது சரியான பலத்துடனேயே அமைகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவர் அமைத்த பார்ட்னர்ஷிப் ஒரு முக்கியமான கட்டத்தில் இக்கட்டான வேளையில் வந்தது.

இந்த போட்டியை நாங்கள் வெற்றிகரமாக முடிக்க இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு அணியும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களுக்கு எதிராக நாம் விளையாடி வெற்றி பெறும்போது நிச்சயம் கடின உழைப்பு தேவை. அந்த வகையில் இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

IND

சென்னை டெஸ்ட் போட்டியில் ரோஹித் சிறப்பாக விளையாடி எங்களுக்கு ஒரு முமென்டத்தை கொடுத்தார். அதேபோன்று அஸ்வின் விலை மதிப்பில்லா வீரராக கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் இருக்கிறார். மொத்தத்தில் இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறந்த வீரர்களை வைத்து விளையாடி உள்ளோம் என்று விராத் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement