இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்ததால் அவர் ஓய்வு பெற்று விட வேண்டும் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்தன. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பிடித்திருந்த அவர் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே குவித்தார்.
என்னோட ஏற்ற இறக்கங்கள் அவருக்கு தான் தெரியும் :
இதன் காரணமாக அவர் மீது இருந்த விமர்சனங்கள் மேலும் அதிகரித்து இருந்தன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 143 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 100 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த சதத்தின் மூலம் இந்திய அணியை 487 ரன்கள் அடிக்க வைத்து 500 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறவைத்தார். விராட் கோலி அடித்த இந்த சதம் ஆஸ்திரேலியா மண்ணில் அவரது ஏழாவது டெஸ்ட் சதம் என்பது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிராக அந்த நாட்டில் 10 சதத்தையும் அவர் விளாசியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்துள்ள இந்த சதம் அவரது சர்வதேச கிரிக்கெட்டின் 81-வது சதமாக அமைந்துதோடு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் அவரது இந்த சதத்திற்கு பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆதரவு குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் :
நான் ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும் துணையாக இருந்தது எனது மனைவி அனுஷ்கா தான். நான் சமீப காலமாகவே நிறைய கடினமான சூழ்நிலையை சந்தித்துள்ளேன் அதுவும் அவருக்கு நன்றாக தெரியும். என் மனதிற்குள் என்ன ஓடுகிறது என்பதையும் புரிந்து கொண்டவரும் அவர்தான். நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போது எனக்கு துணை நின்றவரும் அவர்தான்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா இரண்டாவது போட்டிக்கு வந்தாலும் அந்த ஜோடியை பிரிக்காதீங்க – ரசிகர்கள் முன்வைக்கும் கோரிக்கை
நான் எப்போதும் சாதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து விளையாடியது இல்லை. இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு நாட்களுமே மிகவும் பெருமையானது. இந்த சதம் உண்மையிலேயே தற்போது வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி என விராத் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.



