இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முக்கிய முதுகெலும்பு வீரராக செயல்பட்டு வருகிறார். 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற கேப்டனாக சாதனை படைத்த அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அப்போதைய கேப்டன் தோனியின் ஆதரவுடன் 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தனது மிகச்சிறந்த செயல்பாடுகளால் நிரந்தர இடத்தை பிடித்து சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். குறிப்பாக 2010 – 2019 வரையிலான காலகட்டத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் 50+ பேட்டிங் சராசரியுடன் அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த அவர் 2010 தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்றுள்ளார்.
மேலும் 31 வயதிலேயே 70 சதங்களை விளாசி பிரம்மாண்ட வளர்ச்சி கண்ட அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எளிதாக முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் 2017 முதல் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த அவர் அந்த அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்ததால் ஏற்பட்ட பணிச்சுமை கடந்த 2019க்குப்பின் அடுத்த சதத்தை அடிக்க விடாமல் அவரது அற்புதமான கேரியரில் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனங்களும் ஆதரவும்:
2 வருடங்களாக சதமடிக்காமல் இருந்ததால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சுதந்திர வீரராக விளையாடத் தொடங்கிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் கோல்டன் டக் அவுட்டாகி அதன் பின் நடந்த இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காமால் முன்பை விட சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனால் எப்போது சதமடிப்பார் என்ற பேச்சுகளை விட்ட விமர்சகர்கள் பொறுமையிழந்து அணியில் இருந்து நீக்குமாறு விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள்.
குறிப்பாக பெரிய பெயரை வைத்திருந்தாலும் அதற்கேற்றாற்போல் செயல்படவில்லையெனில் விராட் கோலியை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் வெளிப்படையாக விமர்சித்தார். இருப்பினும் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களும் இதுபோன்ற தருணத்தை கடந்து வந்துள்ளார்கள் என்பதுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்ற வகையில் ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா போன்ற நிறைய வெளிநாட்டு ஜாம்பவான்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஆசிய கோப்பையில்:
இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் ஓய்வெடுப்பாரா என்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்ததற்காக தனியாக விமர்சனத்தை சந்தித்த விராட் கோலி அவை அனைத்தையும் காதல் வாங்கி வைத்துக்கொண்டு விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாட தயாராகி வருகிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வெடுத்து நல்ல புத்துணர்ச்சியுடன் களமிறங்க காத்திருக்கும் அவர் இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களை அடித்து நொறுக்கி டி20 உலக கோப்பையில் எந்தவித கேள்வியுமின்றி இடம் பிடித்து தன்னை சாம்பியன் வீரர் என்று நிரூபிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் விமர்சனங்களை அடித்து நொறுக்கும் வகையில் புதிய ஸ்பெஷலான பேட்டை விராட் கோலி பயன்படுத்த உள்ளதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. ஜாம்பவான் சச்சினை போலவே அவர் பயன்படுத்திய எம்ஆர்எப் ஸ்பான்சர்ஷிப் பெயருடன் கூடிய பிராண்ட் பேட்டை பயன்படுத்தி கடந்த 10 வருடங்களாக எதிரணிகளை தெறிக்கவிட்ட அவர் ஒவ்வொரு பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவும் பேட்டை தனது கையிலேயே சுழற்றுவது ரசிகர்களிடம் புகழ் பெற்றதாகும்.
அந்த வகையில் தற்போது அவர் விளையாடப்போகும் புதிய பேட்டில் எம்ஆர்எப் பெயரில் ஏற்கனவே இருந்த சிவப்பு நிறம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட் இங்கிலாந்தின் வில்லோ மரங்களால் நல்ல வலுவுடன் அழுத்தத்துடன் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. “விசார்ட் கோல்டன் எடிசன்” என்ற பெயருடைய இந்த வகையான பேட்கள் குறைவான அளவிலேயே தயாரிக்கப்படுவதாக விராட் கோலி பயன்படுத்தும் பேட் நிர்வாகம் கூறுகிறது.
மேலும் இந்த பேட்டின் விலை 22,000 ரூபாய் என்றும் தெரிய வருகிறது. எனவே ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது 100வது டி20 போட்டியில் விளையாடி சாதிக்கப் போகும் விராட் கோலி இந்த புதிய ஸ்பெஷல் பேட்டை பயன்படுத்தி பெரிய ரன்களை அடித்து பார்முக்கு திரும்பி விமர்சனங்களை நொறுக்குவாரா என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.



