ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ள பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணி தயாராகி வருகிறது.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடி வந்தார். குறிப்பாக சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு அவர் முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவரால் ஆஸ்திரேலியாவில் 36 வயதில் அசத்த முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன.
ஆஸ்திரேலியாவின் நாயகன்:
ஆனால் முதல் போட்டியிலேயே சதமடித்த அவர் இந்திய அணியின் வெற்றிக்கு தம்முடைய பங்காற்றினார். அதையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை விராட் கோலி முதல் போட்டியிலேயே படைத்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி 43 போட்டிகளில் 10 சதங்கள் உட்பட 2710* ரன்களை 54.20 என்ற அபார சராசரியில் எடுத்துள்ளார். எனவே இரண்டாவது போட்டியில் அல்லது அதற்கடுத்து வரும் போட்டிகளில் ஒரு சதத்தை அடித்தால் ஆஸ்திரேலியாலில் அவர் தனது 11வது சதத்தை பதிவு செய்வார். அதன் வாயிலாக ஜாம்பவான் டான் பிராட்மேன் வாழ்நாள் சாதனையை விராட் கோலி சமன் செய்வார்.
பிராட்மேன் சாதனை:
அதாவது 1930 – 1948 காலகட்டங்களில் விளையாடிய பிராட்மேன் இங்கிலாந்தில் 11 சதத்தை அடித்தார். எனவே விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் 11வது சதத்தை அடித்தால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பிராட்மேன் அவர்களின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்வார். அந்த சாதனை பட்டியலில் தற்போது ஜேக் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியாவில்), சச்சின் டெண்டுல்கர் (இலங்கையில்) தலா 9 சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: என்னை விட பெரிய விராட் கோலி ரசிகரான.. அவர் ஆட்டோகிராப் வாங்க சொன்னாரு.. ஆஸி பிரதமர்
இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் அவர்கள் 4வது இடத்தில் உள்ளார். இதற்கு முன் அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே தமக்கு மிகவும் பிடித்த ராசியான அதே மைதானத்தில் விராட் கோலி இந்த சாதனையை சமன் செய்வதற்கு வாய்ப்புள்ளது.



