
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் இந்தியாவுக்காக 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏனெனில் 2027ஆம் ஆண்டு விராட் கோலி 38, ரோஹித் சர்மா 40 வயதை தொடுவார்கள். அப்போது அவர்களால் நல்ல ஃபார்மில், நல்ல உடல் தகுதியுடன் இந்தியாவுக்காக அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். அதனால் இப்போதிலிருந்தே சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணியை உருவாக்கி 2027 உலகக் கோப்பையில் களமிறக்க தேர்வுக் குழுவினர் விரும்புகின்றனர்.
எனவே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித்தை கழற்றி விட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா பெயர்கள் மாயமாக மறைந்துள்ளது. கடைசியாக விராட், ரோஹித் ஆகியோர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்கள்.
அந்தத் தொடரில் செமி ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். மறுபுறம் பாகிஸ்தானின் பாபர் அசாம் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பலாக விளையாடினார்.
அதன் காரணமாக கடைசியாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐசிசி டாப் 10 ஒருநாள் பேட்ஸ்மேன்கள் அவரை முந்திய ரோஹித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தினர். அதே போல விராட் கோலி தொடர்ந்து 4வது இடத்தில் நீடித்து வந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணியளவில் ஐசிசி ஒருநாள் டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் விராட், ரோஹித் பெயர் மட்டும் மாயமாக மறைந்துள்ளது.
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவின் அந்த திறமை இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்ட்ரென்த் – அபிஷேக் நாயர் பாராட்டு
அதனால் அதிர்ந்த இந்திய ரசிகர்கள் டாப் 100 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தேடியும் அவர்களுடைய பெயர் கிடைக்கவில்லை. அதன் காரணமாக பிசிசிஐயுடன் சேர்ந்து கொண்டு ஐசிசியும் விராட், ரோஹித்தை ஓய்வு பெற வைக்க இப்படி செய்கிறதா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். மொத்தத்தில் விராட், ரோஹித் பெயர்கள் காணாமல் போனது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது வேறு காரணமா? என்பதை விரைவில் ஐசிசி தெளிவுபடுத்தும் என்று நம்பப்படுகிறது.